மனம்

வினா – மனம் இருப்பதால்தான் நாம் மனிதர்கள் என்று சொன்னீர்கள். ஆனால், யோகிகள் மனமிறக்க வேண்டும், மனம் அழிய வேண்டும், மனதை நாசம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்களே ?

இராம் மனோகர் . மனம் பற்றிய கேள்வி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நவீன விஞ்ஞானம் இதை மூளையோடு தொடர்புபடுத்தி விடா முயற்சியுடன் ஆராய்ந்து மனதின் எண்ணற்ற அற்புத ஆற்றல்களை கண்டு வியந்து நிற்கிறது. நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். நம் எண்ணங்களின் தொகுப்பே மனம். எண்ணங்களே இல்லை என்றால் மனம் இல்லை. சூக்குமமான இந்த மனமானது எதை நினக்கிறதோ அதன் வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றது. நினைத்த மாத்திரத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து சொல்லும் வல்லமை பெற்றது. மனோ வேகத்தை கணக்கிட்டு சொல்லி விட முடியாது. நான் என்கிற மூல மலத்திலிருந்துதான் மனம் பிறக்கின்றது. அது சித்தம் என்கிற நிலையில் இருந்து எண்ணங்களை பிறப்பிக்கின்றது. அந்த எண்ணங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் புத்தியாகின்றது. இப்படி அஹங்காரமாகி, சித்தமாகி, புத்தியாகி, பலவகையான எண்ணங்களாகி நிற்கும் எண்ண அலைகளின் தொகுப்பே மனம் எனப்படுகிறது.

இந்த மனதை சூக்கும சரீரம் என்பார்கள். அதாவது நமது சரீரமானது ஸ்தூலம், சூக்குமம், காரணம் என்று மூன்று வகைப்படும். ”ஸீர்யதே ஸரீர” என்ற வாக்குப்படி ஜீரணித்துப் போவதால் இது சரீரம் எனப்படுகிறது. ”தஹ்யதே தேஹ” என்ற வாக்குப் படி தகிக்கப்படுவதால் இதை தேஹம் என்றும் சொல்வார்கள். அதாவது இந்த வாக்குகள் குறிப்பிடுவது ஸ்தூல சரீரத்தை. இந்த ஸ்தூல தேஹம் ப்ராணன் போன பிறகு நெருப்புக்கோ, மண்ணுக்கோ இரையாகி விடும். ஆனால், மற்ற இரண்டு சரீரங்களின் நிலை என்ன ? சூக்கும தேஹம் இராகத் துவேசாதிகளால் விருத்தியடையும். காரண தேஹம் அஹங்காரத்தால் விருத்தியடையும். எனவே ஸ்தூலம் நசித்து விடுவது போல மற்ற இரண்டு சரீரங்களும் நசிந்தாலே முக்தி என்பது கோட்பாடு. ஸ்தூலம் போல சூக்குமமும், காரணமும் நசிந்து போக வேண்டுமானால், அஹங்காராதிகள், இராகத் துவேசாதிகளை ஒடுக்கி, ஞானாக்கினியால் அவற்றை பொசுக்கி விட வேண்டும். அப்பொழுதுதான் அவைகள் நசிந்து போகும்.

இனி கேள்விக்கு வருவோம். நம் சூக்கும சரீரமாகிய மனமானது தூலமாகிய நம் உடலின் மீது ஆதிக்கம் செலுத்தி இயக்க முடியும். அதே போல தூல சரீரமும் சூக்கம சரீரத்தின் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தி இயக்க முடியும். பசி, தாகம், உடலுறவு இச்சை, சோம்பல் போன்ற பல உணர்ச்சிகள் மூலம் சூக்குமத்தின் மீது தூலம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுதான் மனிதனை பலவீனப்படுத்தும் நிலையாகும். அதாவது மனம் உள் முகமாக புத்தி நிலையில் இயங்கும் பொழுது சூக்கும சரீரம் அல்லது உள் மனம் எனப்படுகிறது. அதுவே தூல சரீரத்தின் உணர்ச்சிக்கு வசப்பட்டு வெளி முகமாக இயங்கும் பொழுதுதான் அது புற மனம் எனப்படுகிறது. அப்படி மனமானது தூலத்தை சார்ந்து இயங்கும் பொழுது புத்தி நிலை பலவீனமடைந்து விடுகின்றது. புத்தி நிலையே மனதின் மிக வலிமையான நிலையாகும். அது பலவீனப்படும் பொழுது மனதின் பேராற்றல் படுபயங்கரமான வீழ்ச்சிக்கு ஆளாகிறது. இந்நிலையிலேயே நம்மில் 99. 99% பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

நம் முன்னோர் மனதை அழிந்து விடு என்று சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், அதன் உட்பொருள் வேறாகும். மனதை அழிப்பது என்றால் புற மனதை அழிப்பது என்பதே பொருள். அதாவது தூல தேகத்தின் ஆதிக்கத்திலிருந்து மனம் விடுவித்து புத்தி நிலையை வலிமைப்படுத்து என்கிறார்கள். அதுவே மனவலிமை எனப்படுகிறது. தூல சரீரம் அதிக காலமும், அதிக அளவிலும் சூக்கும சரீரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் பொழுதுதான் மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே ஒரு மனிதன் சந்திக்கிறான் என்றால், அவனது சூக்கும சரீரமானது தூல சரீரத்தின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டுக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சிலர் விவேகமற்ற, மந்தமான வாழ்வை உடையவர்களாக இருப்பதற்குக் காரணமும் இதுதான். விலங்குகள் வாழ்வும் அத்தகையதுதான். உண்ணுவது, உறங்குவது, உறவு கொள்வது இதைத் தவிர வேறு எதுவும் அவைகளுக்குத் தெரியாது. உடல் வயப்பட்ட மனிதர்களுக்கும் அவற்றிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவுமில்லை. தூல சரீரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மனம் தன் தனித்தன்மையை இழந்து விடுகின்றது. அந்த நிலையையே புற மனம் என்கிறார்கள். தூல சரீரத்திலிருந்து மனதை பிரிக்கும் அளவு சூக்கும சரீரமான மனம் புத்தி நிலையில் இயங்கி வலிமைபெறுகின்றது. மனதின் வலிமையே முக்திக்கான ஒரே வழி. வேறு வழி இல்லை. நாம் செய்கின்ற சரியை, கிரியை மற்றும் யோக முயற்சிகள் அனைத்தும் மனதை செம்மைப்படுத்தவே. எனவே மனதை அழிப்பது என்பது புறமனதின் செயல்களை அழித்து, புறச் சூழலால் உதித்தெழும் எண்ணங்களை அற்றுப் போகச் செய்ய வேண்டும் என்பதேயாகும்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

One thought on “மனம்

Leave a comment