முதுமையை மதிப்போம்

*கிழவன்/கிழவி*
“வயதான காலத்தில் போட்டதை தின்னுட்டு ஓரத்தில் முடங்கி கிட கிழவா…இல்லை, கிழவி…” 
இன்றைய அவசர, பொருள் தேடும் உலகத்தில் நம்மில் பெரும்பாலான யுவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள். 
சதம் கண்ட கிழம், அருட்ப் பழம் காஞ்சி மா முனியிடம் வயதில் முதிர்ந்த விருத்தர்கள்(கிழவர்கள்) தரிசனம் பெற்று அவர்கள் மனக்குறை சொன்னார்களாம். 
‘ஒருவருமே மதிப்பதில்லை. வயதான காலத்தில் நீ மெதுவாத் தான் குளிக்க போயேன். குறுக்கே குறுக்கே வராதே, ஒரு ஓரத்தில் போய் உட்கார். உன் காலம் வேறு, எங்கள் காலம் வேறு. அனாவசியமாக எங்கள் விஷயத்தில் தலையிடாதே – என்றெல்லாம் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கூட அருகே அண்ட விடுவதில்லை’ என்று.
கருணாமூர்த்தி மெல்ல பதில் பகர்ந்தாராம். அப்போது அவர் பிராயமும் எண்பதுகளுக்கு மேல். 
‘இப்போது தான் உங்களுக்கு எல்லாம் நிறைய நேரம் கிடைக்கும். நிறைய இறைவனைப் பற்றி, நல்ல சிந்தனைகளை மனதில் நினைத்து வாழலாம். நிறைய நேரம் கோவில், குளம் என்று செலவிடலாம். அப்படி செய்வதனால், குற்றம் அடுத்தவர் மேல் சொல்லும் நம் மனப்பான்மை குறைந்து, நம்மையே நாம் பார்க்க ஆரம்பிப்போம்’ என்று. 
எத்தனை சத்தியமான வார்த்தைகள்…
அது சரி…
கிழவன், கிழவி என்றால் வயதானவர் என்று மட்டும் தானா பொருள்? 
கிழவன் என்றால் உரியவன், தலைவன் என்றும் கிழவி  என்றால் தலைவி என்றும் பொருளாம். 
இழுமென இழிதரும் அருவி 

பழம் முதிர்ச் சோலைமலை கிழவோனே 
என்று நக்கீரத் தேவ நாயனார் திருமுருகாற்றுப்படையில் அருள்கிறார். 
கம்பர்
‘வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி, 

கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும், 
என பிரம தேவனை கஞ்ச நாள் மலர்க் கிழவன் என்கிறார்.
செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்

தில்லாளி னூடி விடும்.
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 
நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டியவற்றைச் செய்யாது வீட்டிற் சோம்பியிருப்பின்  அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப்படையாகச் சடைத்துக் கொள்ளும். 
(குடும்பப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆடவர்களுக்கு சவுக்கடி!!! உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்பது இது தானோ?)
அப்பன் அருணகிரி தனது திருப்புகழில் 
இணை இல் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே … நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே, என்றும் இளமை வாய்ந்த இறைவனே, முருகனே, 
மற்றும் 
இல் கரம் ஈரறு தோள் மேல் சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர் சே செ ஒத்த செம் தாமரைக் கிழவி புகழ் வேலா … வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, 
என்கிறார்.
ஆகையால் இனியாகிலும் பெரியோர்களை பற்றி சிந்திக்கும் போதும், கிழவன், கிழவி என்ற சொற்களைப் பிரயோகப் படுத்தும் போதும் சற்றே மரியாதையாக, கவனமாக இருப்போம். 
முதுமையை மதிப்போம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s