விநாயகர் அகவல்

🐘 *விநாயகர் அகவல் உருவான கதை*🐘
🌻பக்தி இலக்கிய காலத்தில் (கி.பி. 7 இலிருந்து 9 ம் நூற்றாண்டு வரை)  திருமாக்கோதை என்னும் மன்னன் சேரநாட்டில் வாழ்ந்திருந்தார். இவர் ஓரு சிறந்த சிவபக்தன். இவர் தற்போதய கேரளமாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கலூரை (மகோதை எனவும் அழைக்கப்பட்டது) தலைநகராக கொண்டு சேரநாட்டை ஆண்டு வந்தவர். திருமாக்கோதை, (மிருகங்கள் பேசுகின்ற மொழியை அறியும் தகவுடையவர் என பொருள் பட) கழறிற்றறிவார் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார்  மற்றும் பெருமாக் கோதை என்ற பல பெயர்களாலும் இவரறியப்படுகின்றார். 

இவர் சேர அரசகுலத்தில் பிறந்தாலும் பிறந்தது முதல் அரச வாழ்வைத் துறந்து கொடுங்கலூருக்கு அருகேயுள்ள திருவஞ்சிக் குளத்திலுள்ள மாகாதேவன் ஆலயத்தில் சிவப்பணி செய்து சிவனடியாராக வாழ்ந்து வந்தார். சேரநாட்டை ஆண்டு வந்த மன்னன் இவ்வுலக வாழ்வை வெறுத்து துறவறம் மேற்கொண்டு காடேகியதும் சேரநாட்டின் அமைச்சர் பெருமக்கள் ஒன்று கூடி அவர்களுக்குத் தெரிந்த ஒரே அரச வாரிசான திருமாக்கோதையிடம் அரசாட்சியை ஒப்படைத்தனர். அவரும் மகாதேவன் அனுமதி மற்றும் ஆசியுடன் ஆட்சியை ஏற்று செவ்வனே கோலோச்சினார்.
⛅ இவர் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும் எல்லாத் தருணங்களிலும் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி *‘கலீர் கலீர்’* எனக் கேட்பது வழமை. ஒரு நாள் இவர் உள்ளத்தூய்மையுடன் இறைவனை வணங்கியும் இவருக்குச் சிலம்பொலி கேட்கவில்லை. இதனால் தனது பக்தியில் குறைவேற்பட்டு விட்டதாக மனமுடைந்த திருமாக்கோதையார் தனதுயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தார். சிலம்பொலி அதிர அவர் முன் தோன்றிய இறைவன் சிலம்பொலி கேட்காததன் காரணம் உன் பக்தியில் ஏற்பட்ட குறைபாட்டினால் அல்ல, நான் எனது பக்தன் சுந்தரரின் தேனினும் இனிய தேவார இசையில் மயங்கியமையே என்றார்.
இறைவனை மயக்கிய தேனினினும் இனிய சுந்தரரின் இசைபற்றி இதுவரை காலமும் அறியாமல் இருந்து விட்டேனே என்று வருந்தி திருவாரூரை  அடைந்து சுந்தரரைத் தரிசித்து அவருடன் நண்பரானார்.
💥 சேரமான் பெருமாள் நாயனாரின் வேண்டு கோளுங்கிணங்க சுந்தரரும் வஞ்சி சென்று மகா தேவரை பாடி மகிழ்ந்து சோழநாடு மீண்டார். பாண்டிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பிய சுந்தரர் அவர் நண்பர் சேரமானின் நினைவால் மீண்டும் சேரநாடு சென்று மலைநாட்டு ஆலயங்களைத் தரிசித்து மகிழ்ந்தார். 
🌹 வஞ்சியில் தங்கிய காலங்களில் நாள் தவறாது இருவரும் நீராடி மகாதேவரைத் தரிசித்து வந்தனர். ஒரு நாள் சேரமான் நீராடி முடிக்க சிறிது காலதாமதமானதால்  சுந்தரர் மகாதேவர் ஆலயத்தை அடைந்து பூவுலக வாழ்வில் விரக்தி மேலிட  தலைக்குத் தலை மாலைப் பதிகத்தைப் பாடினார். இதனால் மனமிரங்கிய  சிவனாரும் சுந்தரர் வானுலகம் திரும்ப வேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து இந்திரனின் ஐராவதம் எனும் வெள்ளை யானையையும் தேவ பூதகணங்களையும் சுந்தரரைக் கைலாயம் அழைத்து வர பூவுலகிற்கு அனுப்பி வைத்தார்.
🔴 சுந்தரரும் நண்பர் சேரமானை நினைத்து வருந்தினாலும் தேவர்களும் பூதகணங்களும் காத்திருந்தமையால் ஐராவதத்தை வலம் வந்து யானையில் ஏறி கைலாயம் நோக்கி பயணமானார்.
🔵 நீராடி முடித்து மகாதேவராலயத்தை அடைந்த சேரமான் பெருமாள் நாயனாரும் ஆலயத்தில் சுந்தரரைக் காணாது திகைத்து ஞானதிருஷ்டியால் சுந்தரும், தேவ, பூதகணங்களும் ஆகாயமார்க்கமாக கைலாயம் செல்வதை அறிந்து தனது புரவியில் ஏறி அதன் காதில் *‘சிவாயநம’* என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஓதவும் அவர் புரவியும் விண்ணில் பாய்ந்து ஐராவதத்தை முந்தி கொண்டு கைலாயம் நோக்கி சென்றது. அரசரின் தளபதி, மெய்காவர்கள் ஆகியோரும் மன்னரை பிரிய மனமின்றி தமது ஸ்தூல உடம்பை மாய்த்துக் கொண்டு சூக்கும உடம்புடன் சுந்தரர், மன்னன் ஆகிய யாவரையும் முந்திக் கொண்டு கைலாயம் விரைந்தனர்.
இவ்வாறு ஆகாயத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கையில் கீழே பூவுலகில் ஒளவை பாட்டி திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் (விழுப்புரம் மாவட்டம்) ஆலய பரிவாரத்தெய்வமாக இருக்கும் விநாயகருக்குப் பூசைகள் செய்து கொண்டு இருப்பதைக் கண்ணுற்ற  இவர்கள் அவரையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டனர். அதற்கு ஒளவையும் பிள்ளையார் பூசை முடிந்த பின் தான் கைலாசம் என்று கூறி பூசைகளைத் தொடர்ந்தார். 
🍄 பூசைகளால் மகிழ்வுற்ற விநாயகரும் நேரில் தோன்றி ஒளவையினால் படைக்கப்பட்ட அமுது முதலான சிற்றுண்டிகளை மிக நிதானமாக ரசித்து உண்டார். இறுதியில் ஓளவையின் பூசைகளாலும் படையல்களாலும் மகிழ்ச்சியடைந்த விநாயகர், *‘ஒளவையே உனக்கு யாது வேண்டும் கேள்?’* என்றார். ஒளவையும், உனதருளன்றி வேறென்ன வேண்டும் எனக்கு என்றார். விநாயகரும், உலகிலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம் அறிவூட்டப் பாடிய நீ தெய்வக்குழந்தையான என் மேலும் ஒரு பாட்டு பாடு என்றார். உடனே ஒளவையும் *‘சீதக்களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைபாட பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்’* என ஆரம்பித்து  விநாயகரால் தனக்கருளப் பட்ட யோக சித்தியின் மதிப்பும் சிறப்பும்  உலக மக்களுக்கு விளக்கும் வகையில் 72 அடிகளையுடைய விநாயகர் அகவலை அருளினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த விநாயகரும் ஒளவையை தன் துதிக்கையால் தூக்கி, சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் போய்ச் சேர்வதற்கு முன்பாக கைலையில் சேர்த்தார்.
🌷 கைலையை அடைந்த சேரமான் மற்றும் சுந்தரர் ஆகியோர் வியப்புடன் ஒளவையிடம் எவ்வாறு எங்களுக்கு முன் கைலாயம் வந்தாய் என வினவவும் ஒளவையும் சேரனை விழித்து பின்வரும் பாடல் மூலம் விடை பகிர்ந்தார்.

பாடல் வரிகள் :

*‘மதுர மொழி நல் உமையாள் சிறுவன் மலரடியை*

*முதிர நினைய வல்லார்க்கு அரிதோ ? முகில் போல் முழங்கி*

*அதிரவரும் யானையும் தேரும் அதன் பின் சென்ற*

*குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே’*
💎 *குறிப்புக்கள்:*💎
⭕ *ஒளவையார் இராக பக்தியில் வழிபடுவராக இருந்தும் (வைதேய பக்தி வழிபாடுகளில் நம்பிக்கையற்றவர்) வைதேய வழிபாடுகளை அவசரப் படாமல் செய்து முடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.*
🔵 *இராக பக்தி (அல்லது அநுராக பக்தி) – அன்பு மிகுதியால் பாடி பரவி வழிபடுதல் எவ்வித விதிமுறைகளுக்கும் அடங்காமல் பக்தி செலுத்துதல் கண்ணப்ப நாயனார் சிவனிடம் வைத்திருந்தமை போன்ற அன்புடனான வழிபாடு இராக பக்தி வழிபாடு*
⚫ *வைதேய பக்தி – பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒழுங்குகள் வழிமுறைகளுக் அமைய ஆகமவிதிப்படி வழிபடுதல் வைதேய பக்தி வழிபாடு*
🔴 *ஒளவை – விநாயகர் அகவலில் ஒளவை வெளிப்படுத்தியது யோக வழிபாடும் அதன் சிறப்புக்களும்*

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s