நித்ய கர்மானுஷ்டானம் (23)

​ஸ்நான விதானம்

ஸ்நானத்திற்கு முக்கியமாக ஐந்து (5) அங்கங்கள் கூறப்பட்டுள்ளன. 1) ஸங்கல்பம் 2) ஸூக்த படனம் 3) மார்ஜனம் 4) அகமர்ஷண ஸூக்த படனம் 5) தேவாதி தர்ப்பணம் என்ற இந்த ஐந்த அங்கங்களுடன் கூடியது தான் ஸ்நானம் எனப்படும். ஆதலால் இவை மிகவும் அவசியமானவை.  ஆனால் க்ருஹத்தில் (வீட்டில்) ஸ்நானம் செய்யும் பொழுது இந்த ஐந்து அங்கங்கள் தேவையில்லை என்று தர்மகண்ட்த்தில் கூறப்பட்டுள்ளது.

நதிக்கு சென்று நமஸ்கார முத்திரையுடன் கங்கா த்யான ஸ்லோகங்களை சொல்லி, நதி ஜலத்தில் ப்ரவேசித்து நாபி மூழ்கும் சென்று தண்ணீரில் நிற்க வேண்டும். ஸிகையை (குடுமி) இரண்டாக பிரித்து விட்டு, காதுகளையும், மூக்கையும் மூடிக் கொண்டு மூன்று முறை நீரில் மூழ்க வேண்டும். பிறகு ஆசமனம் செய்து, ஸிகையை முடித்துக் கொண்டு, ஸங்கல்பம் சொல்லி, மறுபடியும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஆகாயத்தில் அருண கிரணங்கள் தெரிவதற்கு முன்னரே ஸ்நானம் செய்வது உத்தமம். அதன் மூலம் ப்ராஜாபத்ய பலன் அடைந்து மஹாபாதங்கள் நசிந்து போகும்.

எண்ணை பூசிக் கொண்டு மற்றும் சரீரத்தை தேய்த்துக் கொண்டு நதியில் ஸ்நானம் செய்யக்கூடாது. ஆதலால் நதி வெளியே கரையில் நின்று கொண்டு தேஹத்தை கைகளினால் தேய்த்துக் கொண்டு அழுக்கை அகற்றி பிறகு நதி ஜலத்திற்குள் சென்று மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். இதை ‘மலாபகர்ஷண ஸ்நானம்’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது மந்திரமற்றது. இந்த ஸ்நானம் ஆரோக்கியத்திற்கு, பவித்ரமாக இருப்பதற்கு மிகவும் முக்கியமானது. சரீரத்தில் அழுக்கு படர்ந்திருப்பதால் பவித்ரமும், சுத்தமும் குறையும். அது மட்டுமல்லாமல், உரோம கூபங்கள் (ரந்திரம்/ஓட்டை) அடைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும். அதனால் கணமான ஒரு வஸ்திரத்துடன் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் நன்றாக தேய்த்து அழுக்கை துடைத்தெடுத்து நதிக்கரையில் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். நிவீதி-என்றால் கழுத்தில் மாலை போன்று தரித்தி யக்ஞோபவீதத்தை ப்ரக்ஷாளணம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஸிகையை முடித்துக் கொண்டு இரண்டு கைகளுக்கு இரண்டு பவித்ரங்களைப் போட்டுக் கொண்டு ஆசமனாதிகளுடன் பவித்ரமாகி, வலது கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு ஸ்நான ஸங்கல்பத்தை சொல்லவும். பிறகு மண்ணை எடுத்துக் கொண்டு “அஸ்வக்ராந்தே ! ரதக்ராந்தே ! விஷ்ணுக்ராந்தே வஸுந்தரே | ம்ருத்திகே ! ஹரது மே பாபம் யன்மயா துஷ்க்ருதம் க்ருதம் ||’ என்று சொல்லி சரீர அவயவங்களிள் அனைத்திலும் மண்ணை பூசிக் கொள்ளவும். அதன் பிறகு, “ஸ்நான சமயத்தில் என்னை பற்றி எங்கேயாவது, யாராவது ஸ்மரித்தால், அங்கிருக்கும் ஜலத்தினில் நான் உடனே வந்து சேருவேன்” என்று கங்கா மாதா கூறியதை ஸ்மரித்துக் கொண்டு கங்கா தேவியை த்யான பூர்வகமாக ஆஹ்வானிக்கவும்.

வண்ணான் துணி சுத்தம் செய்வதற்கு ஸ்தாபித்த கல் உள்ள வரை மற்றும் துணிகளை சுத்தம் செய்யும் பொழுது தண்ணீரின் சாறல் எவ்வளவு தூரம் வீசுமோ அவ்வளவு தூரம் வரை உள்ள ஜல ப்ரதேஸம் அபவித்ரமாக கருதப்படுகிறது. அதனால் அவ்வளவு தூரம் வரை உள்ள ஜல ப்ரதேசத்தை விட்டு விட்டு, இன்னும் சிறிதளவு முன்னுக்கு சென்று ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதன் பிறகு நாபி வரை ஆழத்தில் நீருக்குள் சென்று ப்ரவாஹத்திற்கு எதிராக நின்று கொண்டு அல்லது ஸூர்யனுக்கு அபிமுகமாக நின்று, ஜலத்தின் மேல் பாகத்தை இரண்டு கைகளினாலும் இரண்டு பக்கங்களிலும் அப்புறப்படுத்தி மூக்கு, காது துவாரங்களை மூடிக் கொண்டு ஜலத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். மூன்று, ஐந்து, ஏழு அல்லது பன்னிரண்டு முறை நீரில் மூழ்க வேண்டும். ஜலத்தில் மூழ்குவதற்கு முன்னரே ஸிகை முடியை அவிழ்த்து விட வேண்டும். கங்கா நதியில் வஸ்திரத்தை பிழியக் கூடாது. அதே போல் மல மூத்திர விஸர்ஜனம் செய்யக்கூடாது. உமிழக் கூடாது. சௌச சமயத்தில் உடுத்தியிருக்கும் வஸ்திரத்துடன் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது நிஷித்தம் என்று கவனத்தில் கொள்ளவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s