ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்


ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்ற பக்தரின் பெரியப்பா ஸ்ரீ நடேஶய்யரும், ‘கிணி’ என்ற ஸ்வாமிநாதனும்,திண்டிவனம் அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள்!
பெரியவா விழுப்புரம் வரும் போதெல்லாம், விழுப்புரம் எல்லையில் உள்ள, பாப்பான்குளம் பாபுராவ் சத்ரத்தில்தான் தங்குவார். லக்ஷ்மிநாராயணனின் அப்பாதான், பெரியவாளுக்கு, விழுப்புரம் எல்லையிலேயே பூர்ணகும்ப மர்யாதை செய்து பாபுராவ் சத்ரத்திற்கு அழைத்துச் செல்வார். யானை, குதிரை, பஶுக்கள் எல்லாவற்றையும் கட்டி வைக்க, அங்கே பஹு வஸதி உண்டு.
ஒருநாள் லக்ஷ்மிநாராயணனையும் மற்றொரு பாரிஷதரையும் பெரியவா அழைத்தார்…..
“இங்கேர்ந்து…. ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்ல….வடவாம்பலம்-ன்னு ஒரு ஊர் இருக்கு! அங்க…. போயி….ஸுப்ரஹ்மண்ய ரெட்டியார்-ன்னு ஒத்தர் இருப்பார்….. அவரை… நா…. கூப்ட்டேன்னு சொல்லி…. கூட்டிண்டு வாங்கோ!…”
ரெண்டுபேரும் போய் ரெட்டியாரை ஸந்தித்து பெரியவா அழைப்பதாகச் சொன்னார்கள். அவர் நல்ல வஸதி படைத்தவர்.
“பெரியவங்க….. என்ன காரணத்துக்கு கூப்ட்டாருன்னு தெரியலியே…..”
உடனே பெரியவா முன் ஆஜரானார்!….
“இங்க இருக்கற தாஸில்தாரை அழைச்சிண்டு வாங்கோ……”
அப்போதெல்லாம் தாஸில்தார் என்பவர் கிட்டத்தட்ட ஒரு குட்டி கலெக்டர் மாதிரி! அந்த தாஸில்தார் கும்பகோணத்தை சேர்ந்த ப்ராஹ்மணர்!
பெரியவா அவரிடம் ஏதோ ஒரு இடத்தை பற்றி குறிப்பாக கேட்டார்……
“இந்த ஊர்ல என்ன விஸேஷம்-ன்னு….. ஒங்கிட்ட field-map வெச்சிண்டிருப்பியே! அதப்பாத்து சொல்லு பாப்போம்..”
அவர் முழிக்கவும், சிரித்துக் கொண்டே…. தானே அந்த ஊரின் விஸேஷத்தை சொல்ல ஆரம்பித்தார்…..

“200 வர்ஷத்துக்கு முன்னால….. இந்த பெண்ணையாறு வந்து….. இங்க… வடவாம்பலம் பக்கத்லதான் ஒடிண்டிருந்திருக்கு! நாளாவட்டத்ல… ஒதுங்கி ஒதுங்கி… இப்போ…. ரொம்ப தூ..ரம் தள்ளிப் போய்டுத்து! அதோட….. வடவாம்பலத்லதான்… ஆத்மபோதேந்த்ராள்..ன்னு நம்ம காஞ்சி காமகோடி பீடத்தோட 58-வது பீடாதிபதி… அவரோட அதிஷ்டானம் இருக்கு! ராமநாம ஸித்தாந்தம் பண்ணின ஸ்ரீ பகவன்நாம போதேந்த்ராளோட [கோவகுருதான் இவர்!…. அவரோடது ஒரு பீடம் கூட இருந்திருக்கு! லிங்கப்ரதிஷ்டை பண்ணி, அதிஷ்டானம் கட்டியிருந்தா! அதெல்லாம்….. வெள்ளம் அடிச்சிண்டு போய்டுத்து!.. தை பொறந்து….. அஞ்சு தேதி வரைக்கும்….. பெண்ணையாத்துல கங்கை வர்றதா…. ஐதீகம்! பெரிய திருவிழாவா ஆத்தங்கரைல கொண்டாடுவா!….”
“ஆனா…. இப்போ…. அந்த மாதிரி எந்த அதிஷ்டானமும் இருக்கறதா…. தெரியலியே பெரியவா…”
தாஸில்தார் சொன்னதும், பெரியவா பதிலேதும் சொல்லாமல் அவர்களுக்கு ப்ரஸாதம் குடுத்து அனுப்பிவிட்டார்.
திடீரென்று ஒருநாள்…. இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும்! நகரங்களில் கூட மின்வஸதி இல்லாத காலம் என்பதால், க்ராமத்தை பற்றிக் கேட்கவும் வேண்டுமா?….
பெரியவாளுடைய ‘சொடக்கில்‘ லக்ஷ்மிநாராயணனும், மற்றொரு பாரிஷதரும் முழித்துக் கொண்டனர்….
“எனக்கு இப்போவே…. வடவாம்பலத்துக்கு போகணும்! டார்ச் லைட்டை எடுத்துண்டு எங்கூட ரெண்டுபேரும் வாங்கோ!…”
அந்த அகாலத்தில், காலகாலனான பெரியவாளுடன் வடவாம்பலம் போனார்கள்! ராத்ரி 2 மணியளவில் வடவாம்பலத்தை அடைந்தார்கள். பெரியவா அந்த இருட்டில்…[நமக்குத்தான் இருட்டு!!] ஸரியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து…. அங்கு அமர்ந்து ஜபம் பண்ண ஆரம்பித்தார். விடிந்து நான்கு மணிக்கு…. நயனங்களை மெல்லத் திறந்தார்! எதுவுமே பேசவில்லை. மறுபடி நடந்து, ஸூர்யோதயம் ஆகும் முன்னால், முகாமுக்கு வந்துவிட்டார்!
சில நாட்கள் கழித்து…… அதே போல் பின்னிரவில், அதே ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு, வடவாம்பலம் சென்றார். ஆனால், இந்தத் தடவை… இருட்டில் டார்ச் ஒளியில் நடக்கும் போது…. ‘ஸரஸர’ வென்று ஶப்தம் கேட்டதோடு…. ஒரு மஹா பெரிய ஸர்ப்பம் அவர்கள் எதிரில் வந்தது!
“ஒண்ணும் பண்ணாது! ஒரு நிமிஷம்…. அப்டியே நில்லுங்கோ ரெண்டுபேரும்!…”
இருவரும் உறைந்து போய் நின்ற அடுத்த நிமிஷம்….. அந்த ஸர்ப்பம் மறைந்தது!
பெரியவா முன்பு செய்தது போல், விடிகாலை நான்கு மணிவரைக்கும் அதே குறிப்பிட்ட இடத்தில் ஜபம் செய்துவிட்டு, கருக்கலில், ஊருக்கு வந்துவிட்டார்! இவர்கள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை!
“ரெண்டுபேரும் போயி….. ரெட்டியாரை அழைச்சிண்டு வாங்கோ…..”
ரெட்டியார் வந்து நமஸ்காரம் பண்ணினார்….
“எனக்கு… வடவாம்பலத்ல… ஒன்னோட நெலத்துலெர்ந்து… ரெண்டு ஏக்கர் நெலம் வேணும்! தருவியோ?..”
“பெரியவங்களோடதுதான…. அத்தனையுமே!…”
“இல்ல…. இங்கதான் எங்க பீடத்தோட ஸ்வாமிகளோட அதிஷ்டானம் இருக்கு”
“நாங்க எல்லா வயலையும் நல்லா உளுதிருக்கோம் ஸாமி… அப்டியொண்ணும் எங்களுக்கு தட்டுப்படலியே!.  பெரியவங்க சொன்னா…. கட்டாயம் இருக்கும்!”
ரெட்டியார், தஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஒரு ஏக்கர் 200 ரூபாய் வீதம், ரெண்டு ஏக்கர் ரூபாய் 400…..என்று எழுதி, முறையாக ரெஜிஸ்டர் பண்ணி, பத்ரங்களை பெரியவாளிடம் வந்து ஸமர்ப்பித்தார்!
“மானேஜர்கிட்ட இதுக்கான ரூவாயை வாங்கிக்கோ!…”
“பெரியவங்க கேட்டு…. நா….. பணம் வாங்கிக்கறதா?…..”
ரெட்டியார் பணம் வாங்க மறுத்தார்.
“ஒங்களோட அன்பு எனக்கு தெரியறது.. ஆனா…… இதுக்கான பணத்தை நீ வாங்கிக்கத்தான் வேணும்! இல்லேன்னா…. நாளக்கி…. எதாவுது பேச்சு வரும்……!
அங்கு வந்த மானேஜரிடம்……
“ரெட்டியாருக்கு 500 ரூவா…. குடுத்துடு……!
ரெண்டு ஏக்கர் நிலத்தில்தான், பெரியவா, ரெண்டு தடவை இரவில் சென்று ஜபத்தில் ஆழ்ந்த அந்த குறிப்பிட்ட இடம் இருந்தது! குமாரமங்கலம் ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகளையும், ஊர் ஜனங்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பெரியவா அந்த வயல் வெளிகளில் நடந்து, தான் ஜபம் செய்த இடத்துக்குப் போனார்.
பெரியவா ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்……
“இந்த எடத்ல, லேஸா தோண்டுங்கோ…”
மண்வெட்டியால் லேஸாகக் கொஞ்சம் தோண்ட ஆரம்பித்ததுமே….ஒருமண்டையோடு தெரிந்தது! அதே ஸமயம், ” நிறுத்து! நிறுத்து! ” என்று அலறிக் கொண்டே, ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்!பஹு நேரம் கழித்து, அவருக்கு ஸுய நினைவு வந்தது.
“கீழ என்ன பாத்த?…”

பெரியவாளிடம் ஶாஸ்த்ரிகள் சொன்னார்…..
“நா….. கீழ நெலத்தை தோண்டினப்போ…. காவி வஸ்த்ரம் தரிச்சிண்டு, கைல தண்டம், கழுத்துல நெறைய ருத்ராக்ஷ மாலை, நெத்தி நெறைய விபூதியோட….. ஆகாஶத்துக்கும் பூமிக்குமா…..ஒரு ஸன்யாஸியோட உருவம் தெரிஞ்சுது பெரியவா!…..
….’ஸதாஶிவம்… ஸதாஶிவம்…ன்னு சொல்லிண்டிருந்தார்! அவுருக்கு முன்னால…. ஆயிரக்கணக்குல வேதப்ராஹ்மணா ஒக்காந்துண்டு.. வேதபாராயணம் பண்ணிண்டிருந்தா!….. அந்த ஸன்யாஸி… ரொம்ப ம்ருதுவான கொரல்ல….”தோண்டாதே!… தோண்டாதே!..”ன்னு சொல்லி, கையால ஸைகை பண்ணினார்! அப்றம்…. அப்டியே.. அவரோட உருவம் சின்னதாப் போயி…. அப்டியே மறைஞ்சு போய்டுத்து பெரியவா!…”
“ஒண்ணும் பயப்படவேணாம்! அந்த எடத்லதான்..ஆத்மபோதேந்த்ராளோட அதிஷ்டானம் இருக்கு !… அடீல….. ஒரு கோவில் பொதஞ்சு கெடக்கு!.….”
அதன்பின், மிகவும் ஜாக்ரதையாக அந்த இடத்தை தோண்டியபோது, அதிஷ்டானம் இருந்ததற்கான அடையாளங்களும், ஶிவலிங்கமும் கிடைத்தது!
பெரியவா அங்கேயே தங்கியிருந்து 1927, ஜனவரி 17-ம் தேதி, அதிஷ்டானத்தை புனருத்தாரணம் செய்தார்.
இப்போதும் விழுப்புரம்-சேந்தனூர் அருகில் உள்ள வடவாம்பலத்தில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58-வது ஆச்சார்யாளான ஸ்ரீ ஆத்ம போதேந்த்ராளின் அதிஷ்டானம் மிகவும் ரம்யமான சூழலில் அமைந்துள்ளது.

Advertisements

One thought on “ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s