வேலுண்டு விணையில்லை


‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்

எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்

தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்

கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.
ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.
சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.
இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை  தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது.  தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக்  “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s