தாம்பூலம்


தாம்பூலம் தரும் முறைகள் பற்றிக் காணலாம்.
தாம்யத தந்த தயத்வம் ஜனதா:
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இந்த வரிகள் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக,நம்முன் வாழ்ந்திருந்த ஸ்ரீஸ்ரீமஹாபெரியவர், இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ எனத் தொடங்கும் கீர்த்தனையின் வரிகள் என்பதைப் பலரும் அறிவர். 
திருமதி. எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடுவதற்காக இந்தப் பாடலை இயற்றித் தந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதன் பொருள்………… 
‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்;  பூமியில் உள்ள சகல ஜனங்களும் சுபிட்சமுடன் விளங்கட்டும்’ 
என்பதாகும்.
தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். 
வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்
உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.
‘அதிதி’ என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, ‘பசி ‘ என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். 
அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும். 
வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். 
குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும்.  
வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். 
நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.
எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. 
நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். 
சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். 
அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். 
தாம்பூல பூரித முகீ…………..என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.
இதன் பொருள்’
தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்’என்பதாகும். 
விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர். 
தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.
திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.
                       
விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.
விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.
வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.
பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை. 
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம். 
மஞ்சள்,குங்குமம்,

மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. 
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, 
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, 
வளையல், மன அமைதி பெற‌ 
தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)
பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, 
பூ, மகிழ்ச்சி பெருக, 
மருதாணி, நோய் வராதிருக்க, 
கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,  
தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ 

வழங்குகிறோம்.
மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. 
காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே. 
தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. 

அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். 
தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். 
நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் 

இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 
அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.  
வயதான சுமங்கலிகள், பெண்கள், 

குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. 

இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,

பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. 
மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. 

நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.  
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும் 
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா ” 
என்கிறார் அபிராமி பட்டர்.
எனக்குத் தெரிந்த ஒரு மூதாட்டி, வெற்றிலை, பாக்கு, ஒரு சிறு வெல்லத்துண்டு, பூ முதலியவையே வைத்து, வெள்ளி தோறும் வெற்றிலை பாக்குத் தருவார். 
இன்று அவர் பேரன், பேத்திகள் மிக நல்ல நிலையில் இருக்கின்றனர். 
வீட்டுக்கு வருபவருக்கு ஏதேனும் உண்ணத் தர வேண்டும் என்பதால் வெற்றிலை,பாக்குடன் பழம் தருகிறோம். 

மற்றப் பொருட்கள் தர வசதிப்படாவிட்டாலும், அதற்குரிய பலன்கள் குறைந்து விடாது.
குறிப்பாக, இங்கே நான் ரவிக்கைத்துணி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
அந்நாளில், சுமங்கலிப் பெண்களே ரவிக்கை அணிவது வழக்கம். 
இப்போது போல, அதிக அளவு உடைகள் வாங்குவதும் வழக்கத்தில் இல்லாத காலம். 
ஆகவே, ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது,நிறைய பேருக்கு, உபயோகமாக இருந்தது. 
இப்போது எல்லாப் புடவைகளுடனும், அதற்குரிய ‘ப்ளவுஸ்’ வந்து விடுகிறது. 
நாம் கொடுக்கும் ரவிக்கைத்துணி, பல சமயம் நமக்கே ‘ரொட்டேஷனில்’ வந்து விடுகிறது. 
சில கடைகளில் வைத்துக் கொடுப்பதற்கென்றே, மலிவு விலையில் ரவிக்கைத்துணி விற்கிறார்கள். 
அவற்றைத் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கலாமே என்று தைத்தால், தைக்கும் போதே கிழிகிறது. அவற்றை வைத்துக் கொடுப்பதால் என்ன லாபம்?
வஸ்திர தானம் என்பது எளியோருக்கு வழங்கினால் தான் பூரண பலன். 
ஆகவே அம்மாதிரி உள்ளோருக்கு, புடவை, வேஷ்டி வழங்குதல் சிறப்பு.
ஆகவே, உபயோகிப்பவர்களுக்கு ரவிக்கைத்துணி கொடுங்கள். 
மற்றவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் உகந்தது.
  

                             
அதேபோல், கண்ணாடி,சீப்பு தருமுன், நல்ல தரமான, உபயோகிக்கும் நிலையில் உள்ளதையே வாங்கவும். 
மிகச்சிறிய சீப்பு, கண்ணாடி போன்றவை உபயோகிக்காமல் ‘சுற்றுக்களில்’ செல்லும். சீப்போ,கண்ணாடியோ, தரவேண்டும் என்பதற்காக, உபயோகித்ததைத் தர வேண்டாம். 
தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். 
அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான தாம்பூலம் தர வேண்டும். 
அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.
மஞ்சள்,குங்குமப் பாக்கெட்டுகளும் தரமானதாக இருக்கட்டும். 
இயலாவிட்டால், தாம்பூலம் வாங்க வருபவரிடம் மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, மற்றப் பொருட்களைத் தரலாம்.
நவராத்திரிகளில் ‘கன்யாபூஜை’ செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். 
அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.
தம்பதி பூஜை, 

சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, ‘சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும்

பெறுவதாலும் சுபிட்சம் விளையும். 
சிலர் சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. 
அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும். 
எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. 
ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். 
வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.
தாம்பூலம் தரும் முறைகள்:
1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.
2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். 
நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும். 
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும். 
3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

                                                                              
4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு 

சேர்த்து, அம்மன் முன் காட்டவும். 
தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். 
அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் 

நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.
                                 
5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.
6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால்,  அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.
7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.
8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. 
முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர். 
புடவைத்தலைப்பால் முறத்தை மூடி,தாம்பூலம் வழங்குகின்றனர். பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார்.
                                           
தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து,

வெற்றி பெறுவோம்!

Advertisements

One thought on “தாம்பூலம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s