லலிதா பரமேஸ்வரி

​வேதம், புராணம் மற்றும் சுலோகம் – லலிதா சஹஸ்ரநாமம்
“மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது” என்பார்களே, அது இந்த முனிவரைப் பார்த்துத் தோன்றிய முதுமொழி தானோ? “சிறுமாமனிசர்” என்று திருவாய்மொழி போற்றுவதும் இவரைத் தானோ?
குறுமுனிவர் தாம், ஆயினும் குரு முனிவராய்ப் பதினெட்டுச் சித்தர்களுள் இடம்பிடித்துக் கொண்டவராயிற்றே! மலையை அடக்கிக் கடலைக் குடித்தவராயிற்றே! இமயத்தில் நடந்த சிவ-பார்வதி தெய்வத் திருமணத்தைப் பொதிகையில் “டெலிவிஷனாய்”க் கண்டவராயிற்றே! தெய்வ நதியான காவிரி கொணர்ந்தவரும் தெய்வ மொழியான தமிழ் தந்த பெருமானும் இவரல்லவா!
யாரைப் பற்றிக் கூறுகிறோம் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆம், அருந்தமிழ் தந்த அகத்திய முனிவர் தாம் அவர்.
அவர் ஒருமுறை இந்தக் கலியில் புலன் போன போக்கிலே சென்று பாபத்தையும் துன்பத்தையும் பெருக்கிக் கொள்ளும் மாந்தரின் நிலை கண்டு மனம் வருந்திக் காஞ்சியம்பதியில் தவமிருந்தார். அவர் நோக்கம் உலக நலனாக இருந்ததால் இறைவன் அவருக்குக் காக்கும் கடவுளான திருமாலாகக் காட்சியளித்தான். குறுமுனிவருக்குக் குரு வடிவிலே தோன்றினான் மாலவன். ஆம், “ஞானானந்தமயம்” என்றே புகழப்பெறும் ஹயவதன மூர்த்தியே அகத்தியருக்குக் காட்சியளித்தார்.
பரிமுகனை வணங்கிய அகஸ்தியர், உலக மாந்தர் பாபங்களை நீக்கிப் புண்ணிய பலனைப் பெருக்கிக் கொள்ள எளிய வழியேதும் இருந்தால் அதனைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்.
ஆதிசக்தியான லலிதா பரமேச்வரியின் லீலைகளைச் சிரவணம் செய்வதே நம் பாபங்களைப் போக்கிப் புண்ணிய பலன்களைப் பெருக்கும் என்று உய்வுக்கு எளிய வழியருளினான் ஹயக்ரீவப் பெருமான்.
இந்த வரலாறு பிரமாண்ட புராணத்தில் உள்ளது. இந்தப் பகுதியை “லலிதோபாக்கியானம்” என்பர். லலிதா என்றால் லீலைகள் புரிபவள், லாலனம் புரிபவள் என்று பொருளாகும். பரப்பிரம்ம ஸ்வரூபமான சதாசிவனுடன் இணைந்து இந்தப் பிரபஞ்ச நாடகத்தை ஆடிக் களிப்பவள் இந்தத் தேவி. உயிர்கள் எல்லாவற்றிற்கும் வேண்டியதைத் தந்து அருமைக்கிட்டுப் புரக்கும் தாயும் இந்தத் தேவியே.
இந்த லலிதோபாக்கியானத்திலேயே அம்பிகையைத் துதிக்கும் ஆயிரம் நாமங்கள் இடம்பெறுகின்றன. இவை அஷ்ட வாக்தேவியரான வாசினி, காமேச்வரி, அருணா, விமலா, ஜயினி, மோதினி, சர்வேச்வரி, கௌலினி ஆகியோரால் அன்னை லலிதையின் ஆணைப்படி இயற்றப் பெற்றன. பின் ஹயவதனப் பெருமான் இவற்றை அகத்தியருக்குக் கருணையுடன் உபதேசித்தான். (இந்நிகழ்ச்சி நிகழ்ந்த தலம் திருமியச்சூர் என்பர். இங்குள்ள ஆலயத்தில் ஸ்ரீ லலிதா தேவி அழகின் வடிவமாய் வீற்றிருக்கிறாள்.) அகத்தியரின் மூலமாக இத்துதி இவ்வுலகத்தில் பரவியது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் மிகச் சுலபமாகப் பெரும் பலன்களைப் பெற்றுத் தரக்கூடியதாகும். இந்தப் பாராயணம் முதலில் பண்டாசுரனின் கொடுமை தாங்காது தவம் செய்த தேவர்களின் யாகாக்னியிலிருந்து உதித்தவள் இந்தத் தேவி என்று அவள் அவதாரத்தைக் கூறுகிறது. பின் முவ்வுலகிலும் ஈடு இணையற்ற அவள் திவ்ய சௌந்தர்யத்தையும் அவள் வதியும் ஸ்ரீபுரத்தின் அமைப்பு மற்றும் சிறப்புக்களையும் இயம்புகிறது. பின் பண்டாசுர வதக் கதையை வர்ணிக்கிறது. அனுபூதிமான்கள் மட்டுமே அறிந்த லலிதையின் நிர்க்குண ரூபத்தை எடுத்துரைக்கிற பகுதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவியின் பற்பல ரூபங்களின் வர்ணனை, அவளுடைய சகுண ரூபத்தின் குண சௌந்தர்ய மகிமை ஆகியன அழகு வாய்ந்தவை. சிவ-சக்தி ஐக்ய ரூபிணியாகவும், கோவிந்த ரூபிணியாகவும் லலிதாம்பிகை வர்ணிக்கப் பெறுகிறாள்.
லலிதையின் ஆயிரம் நாமங்களைக் கூறித் துதிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்டால், என்ன கிடைக்காது என்பதே பதிலாக இருக்கும். நல்ல வாக்குவன்மை, தன்னம்பிக்கை, செல்வம், நல்ல குடும்பம், மன அமைதி இவற்றோடு ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் தந்து முக்தியையும் அளிக்கவல்லது இது. இந்த ஸ்தோத்திரத்தால் அம்பிகையைத் துதிப்பதற்கே முன் பல ஜன்மங்களில் செய்த புண்ணிய பலன் இருக்க வேண்டும் என்று அகத்தியரிடம் கூறுகிறான் பரிமுகப் பெருமான்.
அன்புரஸத்தின் முறுகிய மூர்த்தியாக, தன் சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமே “ஸ்ரீமாதா” என்று கொண்ட சீரார் அன்னை லலிதை, தன் குழந்தைகளான நம்மையெல்லாம் அன்பொடு பாலித்துக் காப்பாளாக!

Advertisements

One thought on “லலிதா பரமேஸ்வரி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s