ஆபத்பாந்தவர்


காப்பாற்றினார் மஹா ஸ்வாமிகள்
கட்டுரையாளர்: திரு.பிச்சை ஐயர் சுவாமிநாதன்
தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி
தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.
ஆந்திராவில் மஹா ஸ்வாமிகள் எங்கு முகாமிட்டிருந்தாலும் எந்த வேலை இருந்தாலும் அதை அந்த க்ஷணமே மூட்டை கட்டி வைத்து விட்டுப் புறப்பட்டு விடுவார்கள். அந்த மகானைக் கண் குளிரக் கண்டு தரிசிப்பதென்றால் இருவருக்கும் அவ்வளவு ப்ரியம்; ஆனந்தம்; நெகிழ்ச்சி.
ஒருமுறை சதாராவில் (மகாராஷ்டிர மாநிலம்) பெரியவா முகாமிட்டிருப்பதாக கோமதிக்கு தகவல் கிடைத்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் விவரத்தை எடுத்துச் சொல்லி, சதாரா போய் பெரியவாளைத் தரிசனம் செய்து விட்டு வருவோமே என்று கேட்க ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று சந்தோஷப்பட்ட கணவர் கிருஷ்ணமூர்த்தியும் சரி என்று சொன்னார். அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பயணத்துக்கு வேண்டிய துணிமணிகளுடன் இருவரும் சதாரா கிளம்ப ஆயத்தமானார்கள்.
சதாராவுக்கு இவர்கள் போய் சேர்ந்தபோது மாலை நேரம் ஆகிவிட்டது. ஆந்திராவில் பெரியவா தரிசனத்துக்காகப் பல பகுதிகளுக்கு இந்த இருவரும் போயிருந்தாலும், சதாரா விசிட் இது தான் அவர்களுக்கு முதல்முறை. எனவே முன்பின் அதிகம் பழக்கம் இல்லாத ஊரில் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு சதாராவில் உள்ள சங்கரமடத்துக்குப் போனார்கள்.
நீண்ட தூரம் பயணித்து வந்திருந்ததால், மடத்துக்கு வெளியிலேயே உள்ள குழாயடியில் கை – கால்களைச் சுத்தம் செய்து கொண்டு இருவரும் மடத்தின் உள்ளே நுழைந்தார்கள். மகானை தரிசித்து அவரின் ஆசியைப் பெற்றுவிட வேண்டும் என்றே இருவரின் மனமும் பரபரத்தது. பயணச் சலிப்பை எல்லாம் அந்த ஒரு தரிசனமே போக்கிவிடும் என்று விழைந்தார்கள்.
சதாரா சங்கரமடத்தின் உள்ளே காலடி எடுத்து வைத்ததுமே, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் மிகவும் லேசானது. அவர்களது கண்களிலும் மனதிலும் பெரியவாளின் திருக்காட்சியே தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான சாட்சாத் சிவ சொரூபமாக தரிசனம் தருகின்ற அந்த சங்கரனை தரிசிப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாக மடத்தின் உட்புறம் பார்வையால் அங்குமிங்கும் தேடினார்கள் – மஹாபெரியவா எங்கே என்று.
மடத்தின் உள்ளே அவ்வளவாகக் கூட்டம் இல்லை. யாரோ ஒரு பாட்டி மடத்தின் அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து ருத்திராட்சத்தை வைத்துக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார். ஓரிரு மடத்துச் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். புத்தம் புதிதாகவும், வண்ண மயமாகவும் பிரகாசிக்கின்ற பூக்களை ஒரு மூங்கில் கூடையில் வைத்து குறுக்கே கடந்து சென்றார் உள்ளூர் ஆசாமி ஒருவர். அநேகமாக மடத்து பூஜைக்காக இருக்கலாம்.
புதிதாக யாரோ இருவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் மடத்துச் சிப்பந்தி ஒருவர் விறுவிறுவென இவர்களிடம் வந்தார். ‘வாங்கோ வாங்கோ… எங்கேர்ந்து வர்றேள்? மெட்ராஸா? என்று அவராகவே ஊகம் செய்து கேட்டார். 
இவர்கள் செகந்திராபாத்தில் இருந்து வருவதாகவும் பெரியவாளின் தரிசனத்துக்காகப் புறப்பட்டு வந்ததாகவும் சொன்னார்கள்.

சிப்பந்தி உடனே. ‘அடடா…பெரியவா இப்ப மடத்துல இல்லியே..’ என்றார்.
கோமதியின் முகம் வாடிப் போனது. ‘பெரியவா காஞ்சிபுரம் கெளம்பிப் போயிட்டாளா? என்று கேட்டார் கோமதி.
‘இல்லை….சதாரா க்ஷேத்ராடனம் இன்னும் பூர்த்தி ஆகலை. இங்க தான் பக்கத்துல ‘பூசேகாள்வ்’ அப்படிங்கற ஒரு கிராமத்துக்குப் போயிருக்கார். அந்த கிராமத்துக்காரர் பெரியவா தங்களோட கிராமத்துக்கு அவசியம் வந்து அனுக்ரஹம் பண்ணனும்னு பிரயாசைப்பட்டா. அதான் அங்கே போயிருக்கார்’ என்றார் சிப்பந்தி. அப்போது, யாரோ ஒருவர் இந்த சிப்பந்தியின் பெயரை சொல்லி உரத்த குரலில் அழைக்க…’ தோ வந்துட்டேன்’ என்று பதில் குரல் கொடுத்து விட்டு, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிக்காமல் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவரும் சங்கரமடத்தின் உள்ளிருந்து வெளியே வந்தனர். மாலை நேரத்தில் அந்தச் சாலை பிஸியாக இருந்தது.
கோமதிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. நேரமோ மெள்ள இருட்டிக் கொண்டு வருகிறது. இனிமேல் ஏதாவது ஆட்டோ அல்லது டாக்ஸி பிடித்துக் கொண்டு ‘பூசேகாள்வ்’ போய்விடலாமா என்று யோசித்தார்கள். ‘பெரியவாளை எப்படியும் வந்த சூட்டில் இன்றே தரிசனம் செய்துவிடவேண்டும்’ என்கிற பரபரப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது.

மடத்தின் வாசலுக்கு அருகே நிற்கும் புதியவர்களைப் பார்த்து ஒரு சில ஆட்டோக்காரர்கள் அவர்களை நெருங்கினார்கள். ‘வாங்க…பெரியவாளைத் தரிசிக்கத்தானே வந்திருக்கீங்க…. பூசேகாள்வ் கொண்டு போய் விட்டுடறோம். நீங்களா பார்த்து ஏதாவது கொடுங்க என்றனர் வழக்கமான பேர யுக்தியுடன்.
ஆனால் கோமதிக்கு மட்டும் அந்த இருட்டு வேளையில் – அதுவும் பழக்கமே இல்லாத புது இடத்தில் பயணப்படுவது சரி இல்லை என்று திடீரெனத் தோன்றியது. பேரம் பேசிய ஆட்டோக்காரர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு இரவு வேளையில் பயணம் வேண்டாம். இன்று இரவுப் பொழுதை சங்கரமடத்திலேயே கழித்து விட்டு மறுநாள் காலை பூசேகாள்வ் புறப்படலாம் என்று இருவருமே தீர்மானித்தனர்.
இருவரும் சங்கரமடத்துக்குள் மீண்டும் நுழைவதைப் பார்த்த அந்த மடத்துச் சிப்பந்தி ‘ வாங்கோ….நானே சொல்லணும்னு நெனைச்சேன். அதுக்குள்ள யாரோ உள்ள கூப்டதனால போயிட்டேன். வந்து பார்த்தா உங்களைக் காணோம். இந்த அகால வேளையில நீங்க இரண்டு பேரும் தனியா அந்தக் கிராமத்துக்குப் போக வேண்டாம். பாதையும் கரடுமுரடா இருக்கும். ராத்திரி பொழுதுக்கு இங்கேயே தங்கிடுங்கோ. கார்த்தால எழுந்ததும், ஒரு ஸ்நானம் பண்ணிட்டு பஸ்ஸுல போங்கோ. நேரா பூசேகாள்வ் போயிடலாம்’ என்றவர், இருவரும் தங்குவதற்கு உண்டான இடத்தைக் காண்பித்தார். பிறகு ‘ஆசுவாசப்படுத்திண்டு வாங்கோ.. உங்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிப்பந்தி.
பசிவேளையில் ருசியான சாப்பாடு. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, இருவரும் படுக்கப் போனார்கள்.
மறுநாள் காலை ‘பூசேகாள்வ்’ கிராமத்தில் முகாமிட்டிருக்கும் மகாபெரியவாளைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்துடன் சதாரா சங்கர மடத்திலேயே இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தன் கணவருடன் அங்கேயே படுத்து தூங்கினார். செகந்திராபாத்தில் இருந்து வந்திருந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி!

தொலைதூரத்தில் இருந்து புறப்பட்டு வந்த தங்களுக்கு அடுத்த நாள் காலை மஹாபெரியவா தரிசனம் கிடைக்கப் போகிறது என்கிற பரபரப்பில் இருந்ததாலோ என்னவோ…..அன்றைய இரவுப் பொழுது விறுவிறுவென்று ஓடிவிட்டது கோமதிக்கு. 
அதிகாலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்கள் இருவரும். தங்களுக்குப் பக்கத்தில் வேறு யாரோ சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை அப்போது தான் பார்த்தார்கள். அநேகமாக மஹாபெரியவா தரிசனத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பவர்கள் போல் அவர்களது முக ஜாடையில் இருந்து தெரிந்தது. உடன் கொண்டு வந்திருந்த பெட்டிகள் முதலான லக்கேஜ்களைத் தங்களது தலைமாட்டில் வைத்திருந்தனர்.
மடத்துச் சிப்பந்திகள் சிலர் குறுக்கும் நெடுக்குமாகப் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தனர். முதல் நாள் கோமதியைச் சந்தித்த மடத்துச் சிப்பந்தி சொல்லி இருந்தார் – ‘அதிகாலை நேரத்தில் சதாரா பஸ்ஸ்டாண்டுக்குப் போய்விட்டால், பூசேகாள்வ் செல்வதற்கு அங்கிருந்து பேருந்துகள் கிடைக்கும்’ என்று பூசேகாள்வ் செல்லும் பேருந்தை விரைந்து பிடிக்க வேண்டும் என்கிற நினைப்பிலேயே குளித்து முடித்தார்கள். புறப்படத் தயாரானார்கள்.

தங்களுக்கு இரவுச் சாப்பாடு போட்டுத் தங்குவதற்கு இடமும் கொடுத்த சிப்பந்தியிடம் நன்றி சொல்லிவிட்டு, பேருந்து நிலையத்துக்குப் புறப்படலாம் என்று இருவரும் அந்தச் சிப்பந்தியிடம் போனார்கள்.
‘ரொம்ப நன்றி… பெரியவா தரிசனத்துக்காக நாங்க பொறப்படறோம். நீங்க சொன்ன மாதிரியே பஸ்ஸுலயே பயணப்படறோம்’ என்றார் கோமதி.
அந்தச் சிப்பந்தி சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தவர் போல ‘மாமி..உங்களோட நல்ல நேரம். இப்ப இங்கேர்ந்து ஒரு வேண் பூசேகாள்வ் போறது. அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் இதெல்லாத்தையும் ஏத்திண்டு அந்த வேன் பொறப்படப் போறது. மடத்துச் சிப்பந்திகள் சில பேரும் அதுல வருவா. வேன்ல இடமும் இருக்கு. நீங்களும் வேன்லயே போயிடுங்கோ. விசாரிச்சுண்டு போகணுமேங்கிற அவஸ்தை இருக்காது.’
கோமதியும் அவரது கணவரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ‘பஸ்ல ஏறி நாங்க சிரமப்படவேண்டாம்னு பெரியவாளே எங்களுக்கு அனுக்ரஹம் பண்றதா நினைச்சு சந்தோஷப்படறோம். உங்களோட இந்த ஒத்தாசைக்கு ரொம்ப நன்றி’ என்ற கோமதி தன் கணவருடன் நடந்து வேன் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற வாசகம் எழுதப்பட்ட அந்த வேனில் ஏற்கனவே சாமான்களை ஏற்றி முடித்திருந்தார்கள். சிப்பந்திகளும் தயாராக இருந்தார்கள். கோமதியும் அவரது கணவரும் வேனின் முன் இருக்கைப் பக்கம் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.
சமமான சாலையில் பயணித்த பின், கரடு முரடான சாலையில் குலுங்கலுடன் சென்ற அந்த வேன், சில நிமிடங்களுப் பிறகு பூசேகாள்வ் என்கிற கிராமத்தை அடைந்தது. அங்கே பெரியவா தங்கி இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு இடத்தின் முன் வேன் நின்றது.
‘இறங்கிக்குங்கோ…. இங்கதான் பெரியவா தங்கி இருக்கா’ என்றார் வேனில் வந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர். கோமதியும் அவரது கணவரும் தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேனில் இருந்து இறங்கினர். மஹாபெரியவா தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி அளவான ஒரு கும்பல்.
கிராமம் என்றால் அப்படி ஒரு கிராமம். வெள்ளந்தியான மக்கள். மஹாபெரியவா தரிசனத்துக்காக பக்தர்கள் பயணப்பட்டு வந்திருந்த ஓரிரு கார்களும், சில ஆட்டோக்களும் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தன. சதாராவில் இருந்து சிலரை முதல் நாளே ஏற்றி வந்த வாடகை டாக்ஸிகளும் சாலையின் ஓரமாக இருந்தன. டாக்ஸிகளில் வந்தவர்கள் இந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டார்கள் போலிருக்கிறது. டிரைவர்களை வண்டியில் காணவில்லை.
ஆடுகளும் நாய்களும் சாலையின் நடுவே அமர்ந்து எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தன. உடைகளில் அழுக்கு இருந்தாலும் உள்ளத்தில் அழுக்கு இல்லாத மக்கள். மஹாபெரியவாளின் வருகையால் புனிதத் தன்மையுடன் காட்சி அளித்தது பூசேகாள்வ் கிராமம்.
வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிய நந்தவனம் போன்ற ஓர் இடத்தைக் காண்பித்து ‘இங்கே தான் பெரியவா இருக்கா. போய் தரிசனம் பண்ணுங்கோ’ என்றார் கோமதியைக் கடந்து சென்ற ஒருவர். முன்பின் அறிமுகம் இல்லாதவர். தான் பெற்ற தரிசனத்தை அனைவரும் பெற வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள பேர்வழி போலிருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த மனம் வாய்க்கும்.
மனதுக்குள் சங்கர ஜபத்தை முணு முணுத்துக் கொண்டே கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து சென்றனர். மனதுக்கு இதம் தரும் நந்தவனம். வண்ண மலர்களின் நறுமணத்தை அந்தப் பிராந்தியம் முழுதும் அள்ளி வீசித் தெளித்துக் கொண்டிருந்தன அந்த மலர்கள். அங்கே தான் பெரியவா – புன்னகை ததும்பும் முகத்துடன் மண்தரையில் அமர்ந்திருந்தார். ஒரு நந்தியாவட்டை பூச்செடியின் அருகே சிவ சொரூபமாக வீற்றிருந்தார். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.
மஹா பெரியவாளை – ஸ்ரீ சங்கரமடத்தின் ஆச்சார்ய புருஷரை – வெகு சிம்பிளான இடத்தில் பார்த்த மாத்திரத்திலேயே கோமதியின் கண்களில் நெகிழ்ச்சியின் காரணமாக நீர் திரையிட்டது. சங்கரநாமத்தைச் சொல்லிக் கன்னத்தில் மாறி மாறிப் போட்டுக் கொண்டார். ஸ்வாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து பல அடி தொலைவில் தாங்கள் நின்றிருந்தாலும், இருந்த இடத்திலேயே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் இருவரும்.
உள்ளூர் ஜனங்கள் சிலரும், தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் அங்கே – மண் தரையில் – பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். அந்த வேளையில் மகாபெரியவா – முக்கியமாக உள்ளூர் ஜனங்களுக்காக இந்தியில் ஏதோ உபதேசம் செய்து கொண்டிருந்தார். கர்ம சிரத்தையாக அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் பாக்கியம் பெற்ற பூசேகாள்வ் வாசிகள். பிறகு அவர்களுக்கு பிரசாதத்தைத் தன் கையால் கொடுத்து அனுப்பினார்.
பிறகு ஒரு அன்பரிடம் தமிழில் எதோ பேச ஆரம்பித்து விட்டார் காஞ்சி மகான். கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து போய் ஸ்வாமிகளை வணங்கி விட்டு தரையில் விழுந்து நமஸ்கரித்தனர். நிமிர்ந்து பார்த்து ஆசிர்வதித்த மகான் புன்னகைத்தார். பிறகு கோமதியைத் தன் அருகே வருமாறு சைகை காண்பித்தார். 
தெய்வமே நேரில் காட்சி தந்து தன்னை அழைப்பதாகக் கருதிய கோமதியும் அவரது கணவரும், மகானின் அருகே சென்று, வலக்கை விரல்களால் வாய்பொத்தி பவ்யமாக நின்றனர். அவர்களது பூர்வீகம், தற்போது வசித்து வரும் ஊர், உத்தியோகம் போன்ற எல்லாவற்றையும் நிதானமாக விசாரித்து அறிந்தார் மகா பெரியவா.

பெரியவாளிடம் பேசி முடித்த பின் மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்தனர் கோமதியும் அவரது கணவரும். இருவருக்கும் பிரசாதத்தைக் கொடுத்த பெரியவா ‘உள்ள போய் சாப்டுங்கோ’ என்று ஓர் இடத்தைக் கை நீட்டி காண்பித்தார். மனம் நிறைய சந்தோஷத்துடன் இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
ஆயிற்று. சாப்பாடும் முடித்தாயிற்று. இனி செகந்திராபாத் புறப்படவேண்டியது தான் பாக்கி. எனவே பெரியவாளிடம் வந்து ‘நாங்க பொறப்படறோம். பெரியவா உத்தரவு தரணும்’ என்றார் கோமதி. அருகே அவரது கணவரும் பவ்யமாக நின்றிருந்தார்.
‘ஊருக்கு எப்படி போகப் போறேள்?’
‘மத்தியானம் ரெண்டு மணிக்கு சதாரா ஸ்டேஷன்லேர்ந்து புனேவுக்கு ஒரு ரயில் இருக்கு. அதுல புனே போயிட்டு அங்கிருந்து செகந்திராபாத் வண்டியைப் பிடிச்சுப் போயிடுவோம்’ என்றார் கோமதியின் கணவர்.

‘இப்ப பொறப்படவேண்டாம். சாயந்திரமா போங்கோ. இங்கேயே ஓரமா உக்காந்துக்கோங்கோ’ என்று சைகையும் வார்த்தைகளுமாகச் சேர்த்துச் சொன்னார் மஹாபெரியவா.
தேவ வாக்கு ஆயிற்றே! பெரியவா ஒன்று சொல்லிவிட்டால், யார்தான் அதை மீற முடியும். எனவே கோமதியும் அவரது கணவரும் அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்து போகும் பக்தர்களுடன் பெரியவா நிகழ்த்தும் சம்பாஷணைகளையும், பக்தர்களுக்கு பெரியவா ஆசி புரிவதையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர்.
நேரம் ஓடிவிட்டது. மாலைவேளை. அங்கேயே ஒரு காபியைக் குடித்து விட்டு, பெரியவாளிடம் தாங்கள் புறப்படுவதாகச் சொன்னார்கள். புன்னகையுடன் அவர்களை ஆசிர்வதித்து, மீண்டும் ஒருமுறை பிரசாதம் தந்து வழி அனுப்பினார் பெரியவா. பூசேகாள்வ் அனுபவங்களை மறக்க முடியாமல் அங்கிருந்து வெளியே வந்து ஒரு பஸ் பிடித்து நேராக சதாரா ரயில்வே நிலையத்தை அடைந்தனர்.
சதாரா ரயில்வே நிலையத்தை இவர்கள் அடைந்த போது ஸ்டேஷனே பரபரப்பாக இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு முன் திரளான மக்கள் கூடி இருந்தனர். அவர்களில் பயணிகளும் அடக்கம். பயணிகள் அல்லாதவர்களும் அடக்கம். ஒவ்வொருவர் முகத்தையும், அந்தச் சூழ்நிலையையும் பார்த்தால் ஏதோ களேபரம் என்பது மட்டும் கோமதிக்குப் புரிந்தது.

இந்தக் களேபரம் காரணமாக, அடுத்து இவர்கள் செல்ல இருக்கும் புனே ரயில் குறிப்பிட்ட நேரத்துக்கு வருமா என்கிற கவலை வேறு. ‘சரி என்னதான் களேபரம்…ஏன் இவ்வளவு கூட்டம்? என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கோமதியும், அவரது கணவரும் ஸ்டேஷன் ஊழியர் ஒருவரிடம், ‘என்ன விஷயம்…ஏன் இவ்வளவு கூட்டம்?’ என்று கேட்டனர்.
அதற்கு அந்த ஊழியர் சோகம் ததும்பக் கூறினார். ‘ரெண்டு மணிக்கு சதாராவில் இருந்து புனேக்குப் போன ரயில் இங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் ஒரு விபத்துக்கு உள்ளாகி விட்டது. சேத விவரம் என்ன என்று தெரியவில்லை. அதான், அந்த வண்டியில் பயணித்தவர்களின் உறவுக்காரர்கள் என்ன ஆச்சு? ஏதாச்சு என்று தெரிந்து கொள்வதற்காக இங்கே குழுமி இருக்கிறார்கள்.
கோமதிக்கும் அவரது கணவருக்கும் மயக்கம் வராத குறைதான். அந்த வண்டியில் தானே இருவரும் பயணிப்பதாக இருந்தார்கள். பெரியவா ‘இப்ப வேண்டாம்’ என்று உத்தரவு கொடுத்ததால் தானே தாமதமாகப் புறப்பட்டு இப்போது வந்திருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் அந்த ரயிலில் பயணித்திருந்தால்….?
‘பகவானே….சங்கரா’ என்று அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே மஹாபெரியாவாளை மனதுக்குள் தியானித்து விழுந்து வணங்கிய கோமதி ‘எங்களைக் காப்பாத்தின தெய்வமே’ என்று பெருங்குரல் எடுத்துக் கதறினார்.
ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அந்த அதிர்ச்சியான வேளையிலும் கோமதியையும், அவரது கணவரையும் வியப்பாகப் பார்த்தனர். அவர்களுக்குத் தெரியுமா மஹாபெரியவா இவர்களைக் காப்பாற்றிய விவரம்?
பெரியவா சரணம்

Advertisements

One thought on “ஆபத்பாந்தவர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s