அபிவாதனம்


ஒவ்வொரு கோத்ரத்திற்கும் (தந்தை வழி) மூலாதாரர்களாகிய ரிஷிகளின் பெய்ர்களைக் கூறி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, “அவர்களின் வழியாக வந்த ….. என்ற பெயரைக் கொண்ட நான் தங்களை நமஸ்கரிக்கிறேன்” என்று கூறி விட்டு பிரம்மசாரி பெரியவர்களுச் செய்யும் வணக்கத்திற்கு (நம்ஸ்காரம்) முன்பு சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் வார்த்தை தான் ‘அபிவாதயே’. “அபிவாதயே” மந்த்ரம் கோத்ரத்திற்கு கோத்ரம் மாறுபடும்.
உதாரணத்திற்கு ஸ்ரீவத்ச கோத்ரத்தில் பிறந்த நான் என்னை விடப் பெரிய்வர்க்ளுக்கு, “அபிவாதயே, பார்கவ, ஸ்யவன், ஔர்வ, ஆப்னவான, ஜாமதக்னேதி பஞ்சாரிஷேருபரான்விதம் ஸ்ரீவத்ச கோத்ரே, ஸ்ரீனிவாச நாமதேயம் அஸ்மின் பூஹு” என்று கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெரியவர்களையும் மஹான்களையும் நமஸ்கரிப்பதால், ஆயுள், பலம், கீர்த்தி, செல்வம், சந்ததி முதலியன மென்மேலும் அபிவிருத்தியடைகின்றன என சாத்திரங்கள் கூறுகின்றன. ஆகவே மரியாதைக்குரிய பெரியவர்களைக் கண்டால் சாஷ்ட்டாங்கமாக (அதாவது அட்டாங்க வணக்கம் எனப்படுவது – தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.) விழுந்து அவரவர் சம்பிரதாயப்படி ஒரு முறையோ பல முறைகளோ நமஸ்கரிக்க வேண்டும்.
பெரியவர்களை முதலில், நமஸ்கரித்த பிறகு தம்முடைய ப்ரவரம் கோத்ரம், சூத்ரம் வேதசாகை, பெயர் என்று இவைகளை வரிசைப்படி தாம் நமஸ்கரிக்கும் பெரியவரின் காதில் விழும்படி சொல்லி முறையாக அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கு, “அபிவாதனம்” என்று பெயர்.
முதலில் நமஸ்காரம் செய்த பின், இரு உள்ளங்கைகளாலும் காதை மூடிக்கொண்டு மேற்கண்ட ப்ரவரம் கோத்ரம், சூத்ரம் வேதசாகை, பெயர் இவைகளை வரிசைப்படி சொல்லி முடித்தவுடன் இரு உள்ளங்கைகளையும் மல்லாத்தி, வலது மணிக்கட்டின் மேல் இடது கை மணிக்கட்டைக் குறுக்காக வைத்து தாம் நமஸ்கரித்த பெரியவரின் பாதங்களில் குனிந்து சமர்ப்பிக்க வேண்டும்.
நாம் நமஸ்காரம் செய்யும் அப்பெரியவர் நம்மை, “ஆயுஷ்மாநேதி” அல்லது, “தீர்க்காயுஷ்மாந் பவ.” என்று சொல்லுவதோடு நம் பெயரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
சனாதன தர்மத்தில், இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையே “அபிவாதனம்”.
“இன்ன (மூன்று அல்லது ஐந்து) ரிஷிகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டு (குலம்) அவர்களால் உருவாக்கப்பட்ட இன்ன கோத்ரக்காரன் (குடி), (ரிக், யஜுர், சாம ஸாகை) என்ற மூன்று வேதங்களையொட்டிக் கர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டிய முறையை விளக்கும் இன்ன ஸூத்ரக்காரன் (முன் குறிப்பிட்ட மூன்று வேதங்களில்) இன்ன வேதப்பிரிவினை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா” (நான் உங்களின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன்) என்று பொருள் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும்.
ப்ரவரம்: இதில் ப்ரவரம் என்பதற்கு “ஒருவன் தன் கோத்திரத்தை ஆரம்பித்து வைத்த ரிஷிப் பரம்பரையின் மூல ரிஷிகளின் (மூன்று அல்லது சில கோத்திரங்களுக்கு ஐந்து) பெயர்களைச் சொல்லும் வரிசை. வேதங்கள் என்பது எவராலும் உருவாக்கப்பட்டதல்ல; அவை முன்னமே இருந்த சில ஒலிகளே. அகண்ட ஆகாயத்திலிருந்து அது வரை உலகத்தில் அறியப்படாத அந்தப் புது ஒலியினைக் கண்டுபிடித்து உலகத்துக்குக் கொடுத்தவர்கள் ரிஷிகள். இப்படி ஒவ்வொரு கோத்ரத்திலும் மூலவர்களாக ஒன்றிலிருந்து ஐந்து வரை ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். அந்த ரிஷிகளிலும் யார் ரொம்ப முக்கியமானவரோ, அவர் பெயரிலேயே கோத்ரம் இருக்கும்.
உம்- ஆங்கீரச கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த முதல் ரிஷியான ஆங்கீரசர் பெயரில் இருக்கிறது. கௌன்டின்ய கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த மூன்று ரிஷிகளில், மூன்றாமவரான கௌண்டின்யரின் பெயரில் இருக்கிறது. இதற்குச் சில விலக்கும் உண்டு. (உம் – வாதூல கோத்திரமாக இருந்தால், – “பார்க்கவ, வைதஹவ்ய, ஸாவேதஸ – த்ரயாரிஷிய” என்று குறிப்பிட வேண்டும்)
கோத்திரங்கள் – பொதுவாக இன்ன குடியில் பிறந்தவர்கள் என்று அறிய உண்டான வகையில் உருவாக்கப்பட்ட பெயர்கள்
ஸூத்திரங்கள் – ரிக், யஜுர், ஸாம வேதங்களையொட்டி, அவரவர் கர்மாக்களை எந்த வகையில் அனுஷ்டிக்க வேண்டும் என்று ரிஷிகள் வெளியிட்டது.
யஜுர் வேத ஸூத்திரங்கள்- ஆபஸ்தம்ப, போதாயனம்

ரிக்வேத ஸூத்திரங்கள் – ஆஸ்வலாயநம், காத்யாயனம்

ஸாமவேத ஸூத்திரங்கள் – த்ராஹ்யாயணி, ரணாயநி

ஸாகம்: (வேதப்பிரிவு) ரிக், யஜுர் மற்றும் ஸாம வேதங்கள் அதர்வண வேதம்
யஜுர் வேதத்தை அத்யயனம் செய்யும், வாதூல கோத்திரத்தில் பிறந்த ராமகிருஷ்ண சர்மா என்பவர் அபிவாதயே சொல்லும் பொழுது, “அபிவாதயே: பார்க்கவ, வைதஹவ்ய, ஸாவேதஸ த்ரயார்ஷேயே: ப்ரவரான்வித வாதூல கோத்ர; ஆபஸ்தம்ப ஸூத்ர, யஜு: ஸாகா அத்யாயி ராமகிருஷ்ண ஸர்மா நாமா அஹம் அஸ்மிபோ:”
இதில் மரியாதைக்குரிய என்று குறிப்பிட்டதாலேயே யார் யாரை, எங்கெங்கு நமஸ்கரிக்க வேண்டும் என்ற விளக்கமும் கூறப்படுகிறது.
சன்யாசிகளுக்கு யதிகளுக்கு, ஸ்திரிகளுக்கு நமஸ்காரம் செய்யலாம். அபிவாதனம் செய்யக்கூடாது. (மஹாப்பெரியவாள் தாயாருக்கு விதிவிலக்கு உண்டு என்கிறார்.)
பகவானை (வீடுகளில்கூட,) நமஸ்கரித்தால் அபிவாதனம் செய்யக் கூடாது. பெரியவர்கள் கூட்டமாக வந்தால், நமஸ்கரிக்கலாம்; அபிவாதனம் கிடையாது.
பெரியவர்களேயானாலும், ஆலயத்தில் சந்தித்தால், கை கூப்பி நமஸ்கரித்தால் மட்டுமே போதுமானது. அபிவாதனம் கிடையாது.
படுத்துக் கொண்டிருப்பவர்களையும், ஈரத்துணியுடன் இருப்பவர்களையும் நமஸ்கரிக்கவோ அபிவாதனம் செய்யவோ கூடாது.
விருத்தி, க்ஷ்யம் போன்ற தீட்டுக்காலங்களில் யாரையும் நமஸ்கரிக்கவோ அபிவாதனம் செய்யவோ கூடாது.
தம்மைக் காட்டிலும் யோக்கியதாம்சம் குறைவான சிறியவர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அபிவாதனம் செய்யக்கூடாது.
இது எனக்கு என் தகப்பனார் சொல்லிக் கொடுத்த விளக்கம்.
நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு சதாபிஷேகத்திற்குச் சென்றேன். அங்கு சதாபிஷேகக் கதாநாயகன் ஒரு பணி ஓய்வு பெற்ற காவற்துறை உயரதிகாரி என்பது தெரியுமே தவிர, அவர் வேதம் படித்த, சாஸ்த்ர சம்பிரதாயங்களை அறிந்தவர் என்பது எனக்குத் தெரியாத ஒன்று.
அவருக்கு நமஸ்காரம் செய்து, அபிவாதயே சொன்னேன். அவர் “பொய் சொல்லாதே; திரும்பச் சொல்லு என்றார்”. மறுமுறையும் சொன்னேன். எனக்குத் தெரிந்து அதில் தவறேதுமில்லை. எனினும் அவர் மறுமுறையும் என்னிடம் “பொய் சொல்லாதே, திரும்பச் சொல்லு என்றார்”. கொஞ்சம் கோபம் வந்தது. முறைப்பாக நான் சரியாகத்தான் சொல்கிறேன். யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றேன். அவர் சொன்னார் “அந்த ஸாகை சொன்னாயே அது என்ன ஸாகை?” என்றார். நான் “அது யஜுஸ் ஸாகம்” என்றேன். அவர் “அதை நீ தினம் அத்யயனம் செய்கிறாயா? என்றார்.
என் தவறு புரிந்தது. நான் “இல்லையென்றேன்”. அவர் “அதைத்தான் சொன்னேன்; பொய் சொல்லாதே என்று. நீ எப்பொழுது அந்த வேதத்தை அத்யயனம் செய்யவில்லையோ பின் ஏன் அதை தினம் அத்யயனம் செய்கிறேன் என்று பொய் சொல்லிப் பாவம் சேர்த்துக் கொள்கிறாய்” என்றார். இப்பொழுதெல்லாம் நான் அபிவாதயே சொன்னால், “யஜுஸ் சாக ந அத்யாயி” (அதாவது யஜு வேதத்தைப் (படிக்க வேண்டியவன் ஆனாலும் படிக்கவில்லை) என்று சொல்லிவிடுகிறேன்.

படித்ததை பகிர்ந்து கொள் கின்றேன்

Advertisements

One thought on “அபிவாதனம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s