பூணூல்


பூணூல் மகாத்மீயம்  பற்றி ஒரு சிறுகதை
 { காயத்ரி மந்திரத்தின் பெருமை  }
உபநயனம் என்றால் என்ன 
உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும்.  
உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும்.  
இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.   
அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு.  
ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.  
எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது.  
வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  
இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  
சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  
இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை.  
இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர்.  
அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.  
அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.  
இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.  
கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.  
ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.  
அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.  
என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.  
அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.  
சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.  
அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.  
என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?  
ஆம்;  பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.  
அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.  
ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். 
ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த  பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.  
என்ன செய்யலாம்?  
காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?  
அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார். 
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.  
அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.  
இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.  
பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.  
அவ்வளவு தானே!  
நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.  
மன்னன் நகைத்தான்.  
ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.  
பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.  
மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. 
தராசும் பத்தவில்லை.  
பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.  
மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.
சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.  
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.  
கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.  
இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.  
மன்னன் பொருள் தருவானா மாட்டானா?  
ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?  
அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?  
நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?  
அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?  
குறைத்துவிடுவானோ?  
பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?  
அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? 
பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.  
அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.  
காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.  
பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.  
வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.  
தடுமாறினார்.  
ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.  
அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.  
அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.  
என்ன ஆச்சரியம்? 
பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?  
சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.  
பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.  
அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.   
பிராமணர் அங்கிருந்து  சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே.  
சாதுவும் கூட.  
இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.  
தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.  
வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.  
அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;  
அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.  
ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.  
ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.  
அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.”  என்றான் மந்திரி….👌

Advertisements

One thought on “பூணூல்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s