அபார மகிமை


ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா மகிமை (11-3-2007)
“அபார மகிமை”
சாட்சாத் சர்வேஸ்வரரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சுகபிரம்ம ரிஷியின் மேன்மையோடு நம்மிடையே நடமாடும் காருண்யராக திகழ்ந்து அருளுவது நாம் செய்த பாக்யமே!
சசிகலா எனும் ஸ்ரீ பெரியவா பக்தைக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவர் மராட்டி மொழியில் எழுதியுள்ளார். அந்த அனுபவம் அபூர்வமானதாக அமைந்துள்ளது.
பூனாவை சேர்ந்த சசிகலா சிறுமியாக இருந்தபோது அவளுடைய தாத்தாவின் நண்பர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் தட்சிணாமூர்த்தியின் படத்தையும் ஸ்ரீ பெரியவாளின் திரு உருவப்படத்தையும் அனுப்பி அதைப்போலவே சசிகலாவை சித்திரமாக வரைந்து அனுப்புமாறு

கூறியிருந்தார்.
1961 இல் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளை சிறுமி சசிகலா தரிசித்தபோது அவள் வரைந்திருந்த தட்சிணாமூர்த்தி படத்தைப்பற்றி மிக நன்றாக வரைந்திருப்பதாகவும் முக்கியமாக தட்சிணாமூர்த்தியின் கண்களை வரைவது சிரமம் அதை குழந்தை நன்றாக வரைந்துள்ளதாக ஸ்ரீ பெரியவா கூறியது சிறுமிக்கு மிகவும் ஆனந்தமளித்தது.
தானே தட்சிணாமூர்த்தி என்பதை சிறுமிக்கு உணர்த்தவே ஸ்ரீ பெரியவாளின் அருள் இப்படி வகை செய்ததோ என்னவோ! அப்போதிலிருந்தே சிறுமியான சசிகலா மனதில் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்கும் ஆவல் எழலாயிற்று. ஆனால் தாத்தாவின் மறைவிற்கு பிறகு அந்த சந்தர்ப்பமே ஏற்படவில்லை.

பிறகு சுமார் 18 வருடத்திற்கு பிறகு தென் இந்தியாவிற்கு சசிகலா வரும் சூழ்நிலை ஏற்பட, ஸ்ரீ பெரியவாளை தரிசிக்கும் தீராத ஆவலோடு காஞ்சி மடத்திற்கு சசிகலா ஓடினார். ஆனால் அங்கே பெருந்தெய்வம் இல்லை. ஸ்ரீ பெரியவா வடக்கே சென்றுவிட்டதாக தகவலால் சசிகலா ஏமாற்றம் அடைந்தார். ஸ்ரீ பெரியவா பெல்காமில் இருப்பதாக தெரிந்தும் அப்போது சசிகலாவிற்கு தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. 1978 மே மாதத்தில் இது நடந்தது.
நவம்பர் 1979 இல் ஸ்ரீ பெரியவா மகாராஷ்டிராவில் இருப்பதாக சசிகலா கேள்விபட்டவுடன், மகான் எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள பலரிடம் கேட்டும் சரியான் பதில் கிடைக்கவில்லை.
ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்காக ஏங்கும் மனதோடு அமைதியின்றி சசிகலாவின் நிலை மாறியது.  சாலை வழியே எந்த ஒரு மதகுருமார்களையோ, பூசாரிகளையோ பார்க்கும்போதெல்லாம் அவர்களை நிறுத்தி ஸ்ரீ பெரியவா எங்கே இருக்கிறார் என்று கேட்பதே சசிகலாவின் பழக்கமாகிவிட்டது. இருந்தும் யாரிடமிருந்தும் பதில் இல்லை. மாறாக காஞ்சிமடம் எங்கே இருக்கிறது? என்று அவர்களிடமிருந்து எதிர் கேள்வி எழுந்ததுதான் மிஞ்சியது.
அப்படியும் சசிகலாவின் தேடல் ஓய்ந்தபாடில்லை. கடைசியாக உதிர்ந்துவிடட மரத்தில் துளிர்வதுபோல சற்றே நம்பிக்கையூட்டும் எண்ணம் சசிகலாவின் மனதில் உதித்தது. பால் பிரிண்டன் என்ற ஆங்கிலேயர் தான் எழுதிய புத்தகத்தில் ஸ்ரீ பெரியவா தரிசன மேன்மையை விவரித்ததை சசிகலா நினைவு கூர்ந்தார். அதில் ஸ்ரீ பெரியவா அவரிடம் ஸ்ரீ ரமணமகரிஷியை தரிசிக்குமாறு அருளியதை படித்தபோது ஸ்ரீரமணரிடம் வேண்டிக் கொள்ள தோன்றியது. உடனே ஸ்ரீ ரமண பகவானின் படத்திற்கு முன் நின்றபடி தன் அடக்கமுடியாத ஆதங்கத்தை சொல்லி ஸ்ரீ பெரியவா தரிசனம் கிட்ட அருளுமாறு சசிகலா வேண்டினார். ஸ்ரீ ரமண மகரிஷியும் பக்தைக்கு உடனே அருளுவதுபோல அது நிகழ்ந்தது.
சசிகலா, கோகலே என்கிற புரொபஸரை சில தத்துவ விளக்கம் கேட்க சென்றபோது அங்கே அவருடைய சொந்தக்காரர் அவரை பார்க்க வந்திருந்தார். அவர் சாஸ்திரிகளாக இருக்கவே உடனே அவரிடமும் சசிகலா காஞ்சி முனிவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியை விடுத்தார்.
“ஸ்ரீ பெரியவா உகாருக்கு வருவதாய் சொன்னார்கள், ஆனால் சரியான விலாசம் தெரியவில்லை” என்ற சாஸ்திரிகள் கூறியபோது சசிகலாவின் மகிழ்ச்சி எல்லையை கடந்தது.
“உகார் எங்கே இருக்கிறது? யாரிடம் ஸ்ரீ பெரியவா இருக்கும் இடத்தை கேட்டால் தெரியும்”
கேள்விக்கனைகளை சசிகலா விடுக்க, அவர் “உகார என்பது சங்கலி என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள சின்ன ஊர். அங்கு மகாதேவ் கோயில் உள்ளது. ஸ்ரீதிவாக்கர் என்பவருக்கு கடிதம் எழுதினால் பதில் கிடைக்கலாம். இதற்கு மேல் எனக்கு தெரியாது” என்றார் சாஸ்திரிகள்.
உடனே சசிகலா வீட்டிற்கு விரைந்தார். பரமேஸ்வரா! ஒளிந்து மறைந்து நடத்தும் உன் விளையாட்டை இனிமேலும் பொறுக்க இயலாது. உடனே உன் தரிசனத்திற்கு அருள்வாயாக என்று பிரார்த்தித்தபடி ஒரு ரிப்ளை கார்டை எடுத்து குத்துமதிப்பாக திவாகர், விலாசத்தை எழுதி மகான் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு அனுப்பினார். எப்படியோ தபால்காரர் அதை சேர்ப்பித்துவிட பதிலும் வந்துவிட்டது.
உடனே கிளம்ப தயாராகிவிட்டாலும், சசிகலாவிற்கு தடைகள் இருந்தன. பூனாவிலிருந்து அதிகாலை 4.30க்கு ஒரே ஒரு பஸ்தான் இருந்தது. அதில் தனியாக சசிகலா போவதற்கு வீட்டில் பயந்தார்கள். ஆனால் ஸ்ரீ பெரியவாளின் அருளால் அன்று மாலை அடுத்த நாள் காலை பஸ்ஸிற்கு டிக்கட் வாங்க சென்றபோது அங்கே ஒரு நண்பர் எதிர்பட அவரும் துணைக்கு வருவதாக சொன்னார். தெய்வாதீனமாக பஸ்ஸில் இவர்கள் இருவருக்கு மட்டுமே இரண்டு டிக்கட் மிஞ்சியிருந்தது.
ஸ்ரீ ரமண பகவானிடம் வேண்டிக் கொண்டதில் எட்டே நாட்களுக்குள் சசிகலாவிற்கு ஸ்ரீ மகானின் தரிசனம் 1980, ஜனவரி ஒன்றாம் நாள் கிடைத்து விட்டது.
பதினெட்டு வருடங்கள் கழித்து ஸ்ரீபெரியவாளை தரிசித்தபோது, அந்த நடமாடும் தெய்வம் தன்னை நேராக பார்த்தபோது அந்த தீட்சண்யத்தை தாங்க முடியாமல் சசிகலாவின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது.
இந்நேரத்தில் யாரோ ஒருவர் பக்கத்து அறை ஒன்றில் அமருமாறு சசிகலாவிடம் கூறினார். சசிகலா சென்று அங்கே உட்கார உடனே ஒருவர் அங்கே வந்து “உங்கள் பெயர் என்ன?” என்கிறார் இவர் “சசிகலா” என்று கூற “ஓகோ! அதைதான் பெரியவா சைகை மூலம் நெற்றியில் சந்திரன்போல் காட்டியிருக்கிறார்” என்று அந்த சிப்பந்தி அழைத்துச் சென்றார். அங்கு சென்ற சசிகலா தலை தரையில் படும்படி வணங்கினார். அப்போது “பெரியவாளே உன் தரிசனத்திற்காக 18 வருஷம் கழித்து ஆவலாய் வந்திருக்கிறேனே உன் பாதார விந்தங்களை தரிசிக்க இயலவில்லையே” என மனதில் நினைக்க, உடனே அருளும் விந்தையாக ஸ்ரீ பெரியவா எழுந்து நின்று திருபாத தரிசனம் நல்கினார்.
சசிகலாவிற்கு இன்னொரு விருப்பமும் எழுந்தது. இத்தனை வருடங்களாக ஏங்கிய பின் வந்திருக்கிறோமே ஸ்ரீ பெரியவா திருவாக்கு எழுவதை கேட்க இயலாமல் மௌனம் கடைபிடிப்பதாக இந்த நாள் அமைந்துவிட்டதே என்று ஏக்கம் எழுந்தது. ஸ்ரீ பெரியவா பேசுவதை கேட்க அருளவேண்டுமென்று மனதிற்குள் வேண்டினார்.
உடனே ஸ்ரீ பெரியவா அருள இசைந்ததுபோல அருகே ஸ்ரீநாராயண நந்தா என்ற சுவாமிகள் இருந்த குடிலுக்கு சென்றார்.
ஸ்ரீ பெரியவா சைகை மூலமாக நாராயணா நந்தாவிற்கு ஏதோ தெரிவிக்க அவர் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தார். அவர் இப்படி படிக்க, படிக்க ஸ்ரீ பெரியவா அதை விளக்குவதுபோல நீளமாக சமஸ்கிருதத்தில் பேசி அருளினார். மகானின் பேரருள் இத்தனை உயர்ந்ததா! பக்தையின் ஆவலையும், மனதில் பிரார்த்தித்ததையும் தன் விரதத்தையும் மீறி மாபெரும் கருணையால் நிறைவேற்றி அருளும் தெய்வத்தை மனம் உருக தரிசித்து நின்றார் சசிகலா.
“ஸ்ரீ பெரியவா இன்னிக்கு மௌனவிரதம்தான்! லௌகீகமாக பேசவில்லை. தெய்வ மொழியான சமஸ்கிருதத்தில் உபநிஷத்திற்கான விளக்கத்தை சொல்கிறார். ஆகவே மௌன விரதம் மீறப்படவில்லை” என்று அருகில் யாரோ சொல்வதை கேட்டதும் சசிகலாவிற்கு ஒரு உண்மை புலப்பட்டது.
ஒரே ஒரு பக்தையின் அடிமனதில் ஏற்பட்ட ஏக்கத்திற்காக, இந்த மாபெரும் தெய்வம் இத்தனை எளிதில் விரதத்தையும் மீறாமல் எப்படி அருள முடியுமோ அப்படி யாருக்கும் தெரியாதவகையில் அந்த பக்தைக்கு மட்டுமே புலப்படும்படி அருளும் அபார மகிமையை எண்ணி சசிகலாவிற்கு ஆனந்த பெருக்கு ஏற்படலாயிற்று.

Advertisements

One thought on “அபார மகிமை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s