தாடங்க ப்ரதிஷ்டை


மஹா பெரியவா 1923 ஏப்ரல் மாதத்தில் திருவானைக்காவில் அகிலாண்டேச்வரி அம்மனுக்குத் தாடங்கப் பிரதிஷ்டைக்கு முகூர்த்தம் வைத்திருந்ததால்,திருநெல்வேலி ஜில்லா யாத்திரையைச் சீக்கிரத்தில் முடித்துக் கொண்டு திருச்சிராப்பள்ளிக்கு வரவேண்டியதாயிற்று. வரும் மார்க்கத்தில் ஸ்வாமிகள் திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் முகாம் செய்திருந்தார்கள். அப்பொழுது திண்டுக்கல்லுக்குச் சுமார் இருபது மைல் தூரத்திலுள்ள சிறுமலைக்கு விஜயம் செய்து, பரிவாரங்கள் ஒன்றுமில்லாமல், குறிப்பிட்ட சிலசில சிப்பந்திகள் மாத்திரம் பின்வர மலைமீது வெகுதூரத்தில் ஏறி, அங்கே பச்சை இலைகளால் பர்ணசாலை ஒன்று அமைத்துக் கொண்டு, நிர்மானுஷ்யமான இயற்கைக் காட்சிகளிலே ஈடுபட்டவர்களாய், அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தார்கள். 

 காமகோடி பீடத்திற்குப் பல க்ஷேத்திரங்களில் மடங்கள் ஏற்பட்டுள்ளன. அவைகளில் திருவானைக்காவில் உள்ள மடத்தை மிகவும் பழமையானதெனச் சொல்லுகிறார்கள். விஜயரங்க சொக்கநாதரால் மடத்திற்கு அளிக்கப்பட்ட தாமிரசாஸனத்தில் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. அவ்வூர் வடக்கு வீதியில் ஏற்பட்டுள்ள இந்த விசாலமான மடம் எப்பொழுது தோன்றிற்று என்று தீர்மானிக்கத்தக்க ஆதாரம் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஜம்புரிஷி என்றவர் இத்தலத்தில் வசித்த செய்தியையும் இங்குக் குறிப்பிடலாம். இம்மடத்தில் சமீபகாலம் வரையில் அந்தணர்கள் தங்கள் பாலகர்களுக்குப் பிரும்மோபதேசம் செய்து வைப்பது வழக்கமாயிருந்தது. இன்று இந்தியாவின் பழுத்த விஞ்ஞானியாக விளங்கும் ஸர்.எம்.விசுவேசுவரையர் தமக்கு உபநயனமும் பிரம்மோபதேசமும் இந்த மடத்தில்தான் நடைபெற்றனவென்று அவர் 1923-ஆவது வருடத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த சமயம் தெரிவித்தார்கள். முழுவதும் கல்மண்டபங்களாக அமைக்கப்பட்டிருந்த இந்த மடமானது சென்ற 1908-ஆவது வருடத்திலேயே மிகவும் ஜீரணதசை அடைந்திருந்ததை ஸ்வாமிகள் நேரில்  கண்டிருந்தார்கள். அவர்களின் மனஸில் இதை நன்கு புதுப்பித்து வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பிக்கும் ஓர் முக்கிய ஸ்தானமாக இதனை அமைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் அப்பொழுதே உதித்தது. ஸ்வாமிகள் இந்த மடத்தின் திருப்பணியை 1920-ஆவது வருடம் ஆரம்பிக்கக் கட்டளையிட்டார்கள்..

அகிலாண்டேச்வரி அம்மனுக்குத் தாடங்கம் என்னும் காதிலணியும் ஆபரணத்தில், ஸ்ரீ சக்கரத்தைச் சங்கரர் ப்ரதிஷ்டை செய்துள்ளார் (அதனுடன், அம்பிகையின் முன் ஓர் விநாயகரையும் அவர் ஸ்தபனம் செய்து, தேவியிள் உக்கிரத்தையும் சாந்தப்படுத்தினார்.) அன்று முதல் அம்பிகையின் இரு காதுகளிலும் அத்தாடங்கங்கள் அணிவிக்கப்பட்டு வருகின்றன. இரத்தினங்களால் பதிக்கபெற்ற அந்தத் தாடங்கங்களுக்கு எப்பொழுதாவது பழுதேற்பட்டால், அவைகளைப் புதுப்பித்து மறுபடியும் ஸ்தாபனம் செய்யும் உரிமை காமகோடி பீடத்தின் ஆசாரியர்களுக்கே உரியதாகும். 1846-ஆவது வருடத்தில் அக்காலத்திலிருந்த ஆசாரிய ஸ்வாமிகளால் ஒரு முறை தாடங்கப் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தாடங்கங்களுக்கு மலினம் ஏற்பட்டிருப்பதாயும், அவைகளைச் சீக்கிரம் புதுப்பித்துத் தாடங்கப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும் தேவஸ்தானத்து அதிகாரிகள் 1920-ஆவது வருடத்திலேயே மடத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர். இவ்விஷயத்தில் ஸ்வாமிகள் தீர்க்கமாக ஆலோசனை செய்து, அவைகள் வெகுகாலம் அழியாமலிருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து, பழைமையான அந்தத் தாடங்கங்களைச் சீர்திருத்தம் செய்வதுடன் அவைகளை உள்ளடக்கி வைக்கும்படி ஸ்ரீசக்கர வடிவமாக ரத்தினங்கள் பதித்த புதிய இரண்டு மேலுரைகளையும் தயாரிப்பதென முடிவு செய்தார்கள். ஸ்வாமிகளின் விருப்பப்டி இந்தப் பணியை மடத்தின் முக்கிய சீடர்களும், சென்னையில் ரத்தின வியாபாரத்தில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்களுமான டி.ஆர்.டாக்கர் அண்டு சன்ஸின் சொந்தக்காரர்கள் முற்றிலும் ஏற்றுக் கொண்டானர். இந்தப் ப்ரதிஷ்டையை முன்னிட்டு ஸ்வாமிகள் திருச்சிராப்பள்ளிக்கு விஜயமான பொழுது, .திருச்சி மக்கள் ஸ்வாமிகளுக்கு அச்சமயம் அளித்த வரவேற்பு அதுவரையில் எவருக்கும் அளிக்கப்படாத வகையில் விளங்கிற்று.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s