அவதாரம்


ஸ்ரீமன் நாராயணன் கலியுகத்திலே எப்போது அவதாரம் பண்ணப் போகிறார்?
அர்ஜுனனிடம் சர்வக்ஞத்வத்தை எடுத்துச் சொன்ன பகவான் அதற்கும் மேல், தான் வந்து அவதரித்தது தன்னுடைய சங்கல்பத்தினாலே என்று அழகாக எடுத்துக் காட்டுகிறான்.
பகவான் மேலும் அர்ஜுனனிடம் சொல்கிறான்.

” பிறப்பற்றவனாய் உன்னை இருக்கச் செய்ய நான் பலவிதமாய் வந்து பிறக்கிறேன்.அவ்வாறு நான் பிறப்பதற்கு கர்மாக்கள் காரணமல்ல. தர்மமானது வாட்டமுறும் தருணத்தில், அதர்மம் தலை விரித்தாடும் தருணத்தில் நான் வந்து பிறக்கிறேன். என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன். “ஆத்மாநாம் ஸ்ருஜாமி”.
இரண்டு பொருள் சொல்லலாம் இதற்கு. லோகத்திலே பகவானும் வந்து பிறக்கிறான். பகவானுடைய ஆத்ம ஞானிகளையும் பிறப்பிக்கச் செய்கிறான்.
” ஆச்சார்ய புருஷர்களான ஞானிகளை பிறப்பிக்கச் செய்து அவர்கள் மூலமாகவும் உலகத்தைத் திருத்திப் பணி கொள்கிறேன். நானும் வந்து பிறக்கிறேன். உயர்ந்த மகான்களையும் உலகத்தில் பிறப்பிக்கச் செய்கிறேன்” என்றான் பரமாத்மா.
” என்னுடைய அவதார பிரயோஜனம் என்ன என்று கேட்கிறாயா?

பரித்ராணாய சாதுநாம் 

விநாசாய ச துஷ்க்ருதாம் 

தர்ம சம்ஸ்தாப நார்த்தாய

சம்பவாமி யுகே யுகே
ரொம்பவும் அழகாகச் சொல்கிறான் பகவான். ” அவதார பிரயோஜனம் என்ன என்றால், சாதுக்களை ரக்ஷிப்பதற்கும், துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகம்தோரும் நான் வந்து பிறக்கிறேன்” என்கிறான்.
நாம் கதை கேட்கிறோம். ” த்ரேதா யுகத்திலே இப்படி நடந்தது. துவாபர யுகத்திலே இப்படி நடந்தது. க்ருத யுகத்திலே இப்படி நடந்தது. பகவான் அப்போ அவதாரம் பண்ணினான். இப்போ அவதாரம் பண்ணினான்” என்றெல்லாம் புராணங்களில் சொல்லிக் கேட்கிறோம்.

ஆனால், ‘கலியுகம் பிறந்து ஐயாயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டதே .. பகவான் இப்போது ஒரு அவதாரம் பண்ணக் கூடாதா! பரமாத்மா?’ என்று ஒரு சந்தகம் நமக்கு எழுகிறது.
ஒரு ஹிரண்ய கசிபு இருக்கிற போது பரமாத்மா அவதாரம் பண்ணினானே; ஒரு ராவணன் இருக்கிற போது அவதாரம் பண்ணினானே; ஒரு சிசுபாலனை வாதம் பண்ண அவதாரம் பண்ணினானே…. தத்துல்யமாய் ( கண்ணுக்கு எதிரே) இப்போது நிறைய பேர் அசுரர்களாக உள்ளார்களே இந்த லோகத்திலே! ஒருத்தருக்காக அவதாரம் பண்ணினவன் இப்போது பல அசுரர்கள் இருக்கிற போது ஏன் அவதாரம் பண்ணவில்லை?’ என்று சந்தேகம் வரும்.

அதனால் தான் கீதையிலே இந்த சந்தேகத்தைப் போக்குகிறான் பகவான்.
இதை விளக்கத்தான் அழகாக ஒரு ‘ச’ போட்டிருக்கிறான் இந்த ஸ்லோகத்திலே. ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’.
அனுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் என்றால் 32 அக்ஷரத்திலே எழுத வேண்டும். 31 அக்ஷரம் வந்துவிட்டது. ஒன்று வரவில்லை என்றால் ஒரு’ச’ வைப் போட்டு விட்டால் சந்தஸ் பூர்த்தியாகிவிடும்.

ஆனால் பகவானுடைய வாக்கிலே —கீதையிலே வந்த ‘ச’ காரம் சந்தஸ்ஸை நிரப்ப மட்டும் வந்ததல்ல. அதன் நோக்கம் உயர்ந்தது. அது எதைக் காட்டுகிறது என்றால் பகவானுடைய அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது.

‘துஷ்க்ருத் விநாசனம்’ என்பது அவதாரத்தின் முக்கிய நோக்கமல்ல.
அவனுடைய அவதாரத்தின் முக்கிய நோக்கம் சாது சம்ரக்ஷணம் ( பரம பாகவதர்களைக் காப்பாற்றுதல்). துஷ்க்ருத் விநாசனம் என்பது அதன் ஊடே நடக்கக் கூடியது தான்……. இதைத் தான் அந்த ‘ச’ காரமானது காட்டுகிறது.
இப்போது பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்; நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள் .

ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன் கிடைப்பானா? பகவான் அந்த ஒரு ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.
பிரஹலாதன் போல ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான் அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான். அப்படிப் பட்ட நிஜ பக்தி உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும் — பகவான் அரை குலைய, தலை குலைய ஓடி வருவான். சாதுக்களைக் காப்பாற்றுவது தான் பகவானுக்கு முக்கியம் என்பதை இந்த ‘பரித்ராணாய சாதூனாம்’ என்கிற ஸ்லோகம் நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s