குரு பூர்ணிமா

முழுநிலவு நாளான பவுர்ணமி தினங்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்தவையே.
பெரும்பாலும் இது அம்மன் வழிபாட்டுக்கு ஏற்ற நாளாக பக்தர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
தேவி பக்தர்கள் நவாவரண பூஜை செய்து, லலிதா சகஸ்ரநாமம், திரிசதி, அஸ்டோத்திரம், தேவி மகாத்மியம் போன்றவற்றைப் படித்து வழிபடுவர்.
சங்கீதம் கற்றோர். முத்துசுவாமி தீட்சிதரின் கமலாம்பா நவாவரணப் பாடல்கள், சியாமா சாஸ்திரிகளின் அம்பாள் பாடல்களைப் பாடுவர்.
ஆந்திர, கேரள, மகாராஷ்டிரர்கள் சத்தியநாராயண பூஜை செய்து மகிழ்வர்.
இதுபோல, ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கூடுதலான சிறப்புகளும் உண்டு.
 *சித்திரைப் பவுர்ணமி* – சித்திரகுப்த வழிபாடு.
 *வைகாசிப் பவுர்ணமி* – கந்தபிரான் அவதார தினம்.
 *ஆனிப் பவுர்ணமி* – அருணகிரியார் ஜெயந்தி
*ஆடிப் பவுர்ணமி* – வியாச ஜெயந்தி – குரு பூர்ணிமா
*ஆவணிப் பவுர்ணமி* – அமர்நாத்,

கேதார்நாத், கைலாச தரிசனம்.
 *புரட்டாசிப் பவுர்ணமி* – நவராத்திரிக்கு அடுத்த பவுர்ணமி
*ஐப்பசிப் பவுர்ணமி* – சிவனுக்கு அன்னாபிஷேகம்
*கார்த்திகைப் பவுர்ணமி* – அருணாசல ஜோதி தரிசனம்.
 *தைப் பவுர்ணமி* – முருகனுக்கு காவடி வழிபாடு.
 *மாசிப் பவுர்ணமி* – கும்பகோணம் மகாமகக் குள நீராடல்
*பங்குனிப் பவுர்ணமி* – சிவன் – பார்வதி, ராமர்-சீதை, ஆண்டாள்-ரங்கநாதர், கந்தன்-வள்ளில தேவசேனா போன்ற தெய்வத் திருமணங்கள்.
இவ்வாறு சிறப்புகள் பல பெற்ற பவுர்ணமியில் ஆடிப் பவுர்ணமி குரு பவுர்ணமியாக (குரு பூர்ணிமா) கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் அம்சமான வியாசர் வேதத்தை நான்காக வகுத்தார். அதை அனைவராலும் ஓதமுடியாது என்பதால், அதன் சாரத்தை உள்ளடக்கி 18 புராணங்களைப் படைத்தார். பிரம்மசூத்திரமும் செய்தார்.
எனவே சனாதன தர்மத்தை விவரித்த வகையில் இவரே பலருக்கும் முதல் குருவாகத் திகழ்கிறார். எனவே அவரது அவதார தினமான ஆடிப் பவுர்ணமியை வியாச ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர்.
அன்றைய தினம் எல்லா மடங்களைச் சேர்ந்த ஆச்சாரியார்களும், வியாசரில் தொடங்கி, தங்களுக்கு முன்னுள்ள ஆச்சாரியார்களுக்கு விசேஷ பூஜைகள் செய்வர். சீடர்கள் தங்கள் குருவை அணுகி குருவருளும் திருவருளும் பெறுவர்.
பொதுவாக குரு பவுர்ணமியை குரு வழிபாட்டுக்குரிய நாளாகக் கடைப்பிடிக்கலாம்.
 *தட்சிணாமூர்த்தி*🙏
சிவ வடிவத்தில்-நாம் தட்சிணாமூர்த்தியை குருவாக எண்ணி வழிபடுவோம்.
அவர் உபதேசமோ மவுன உபதேசம்.
சிவாலய கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியை நாம் தரிசிக்கலாம். 

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை

 யாறங்க முதல் கற்ற கேள்வி

 வல்லோர்கள் நால்வருக்கும் வாக்கறிந்த

 பூரணமாய் மறைக்கப்பாலாய்

 எல்லாமா யாவதும்

 இருந்தபடி இருந்துகாட்டி

 சொல்லாமல் சொன்னவரை நினையாமல்

 நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்

 என்னும் பாடலைப்பாடி வணங்கினால் சிவகுருவின் அருள் சித்திக்கும். கும்பகோணத்துக்கு அருகே, சுக்கிர தலமான கஞ்சனூர் சிவாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியை ஒரு குழந்தை துதித்துப் போற்றியது தட்சிணாமூர்த்தி குழந்தையின் கன்னத்தை வருடினாராம். வைணவ சம்பிரதாயத்தில் பிறந்த அந்தக் குழந்தை இவ்வாறு சிவபக்தியில் திளைப்பதைக் கண்ட சில வைணவர்கள், உன் சிவபக்தி உண்மையென்றால் இங்குள்ள கல்நந்திக்கு புல்லைக் கொடு. அது புல்லைத் தின்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றனர். ஹரதத்தன் என்னுமந்த சிறுவன் அன்போடு புல்லைக் கொண்டுபோய் கல்நந்திமுன் வைக்க, அதை உண்டுமுடித்தது. அதுகண்டு அனைவரும் அதிசயித்தனர். அப்படியும் மனம் சமாதானமடையாதவர்கள் ஒரு இரும்புத்தட்டைப் பழுக்கக் காய்ச்சி. அதன்மேல் உட்கார்ந்து சிவனே பரம்பொருள் என்று சிறுவனைக் கூறச் சொன்னார்கள். அவனும் சிவ பஞ்சாட்சரம் சொல்லி அமர்ந்தான். அது அவனுக்கு குளிர்ந்த தட்டாக விளங்கியது. இந்த நிகழ்ச்சி அங்கே சிலைவடிவாக செதுக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் அருளுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு.
 *ஹயக்ரீவர்*🙏
சைவர்களுக்கு ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றால், வைணவர்களுக்கு ஆதிகுரு-குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்ட அசுரன் வேதங்களை அபகரித்துச் செல்ல, அவனை வதைத்து வேதங்களை மீட்க திருமால் எடுத்த அவதாரமே ஹயக்ரீவ அவதாரம்.
வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகருக்கு கலை, ஞானம் அனைத்தையும் அருளியவர் ஹயக்ரீவரே…
 *ஞானானந்த மயம் தேவம்*

 *நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்*

 *ஆதாரம் சர்வ வித்யானாம்*

 *ஹயக்ரீவம் உபாஸ்மஹே…*
என்பது ஹயக்ரீவர் துதி….

ஸ்படிகம் போன்று நிர்மலமானவரும் ஞான சொரூபியானவரும், எல்லா கலைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன். என்பது இதன் பொருள்.

 *தத்தாத்ரேயர்*🙏
அத்திரி மகரிஷி அனுசுயாதேவி தம்பதிக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்கள், இரு கால்கள் கொண்டவர். சங்கு, சக்கரம், உடுக்கை, திரிசூலம், தண்டம், கமண்டலம் போன்றவற்றை ஏந்தியவர். நந்தியை வாகனமாகக் கொண்டவர். அத்தி மரத்தின் கீழிருக்கும் இவரை பிரம்மா-விஷ்ணு-சிவரூப குரு என்று வடமாநிலங்களில் வழிபடுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தத்தாத்ரேய வழிபாடு பிரசித்தி பெற்றது.
 *சிவகுருநாதன்*🙏
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் தன் தந்தையான சிவனுக்கே. ஆதிகுருவான வருக்கே பிரணவ உபதேசம் செய்தார். எனவே தகப்பன்சாமி, சுவாமிநாதன். குருகுகன், குமரகுருபரன் என்றெல்லாம் பெயர் பெற்றார். முருகப்பெருமான் பிரணவ உபதேசத்தை மூவருக்கு செய்தார் என்பர். பரமசிவன், அகத்தியர், அருணகிரிநாதர், முருகனடியாரான அருகிரிநாதøர் சமரச தெய்வ வழிபாடு செய்பவர். ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயக் கடவுள்களையுமே ஆறுமுகனை மையமாக வைத்து இணைத்துப் பாடினார். அத்தகைய சிவகுருநாதனான முருகப் பெருமானையும் குருவாக எண்ணி வணங்கலாம்.
 *தெளிவு குருவின் திருமேனி காணல்*
 *தெளிவு குருவின் திருநாமம் செயல்*
 *தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்*
 *தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே…*
என்னும் திருமூலரின் பாடலை நினைவுகூர்ந்து…
இந்த குருபூர்ணிமா நாளில் குருவின் தாள்களை வணங்கி திருவருள் பெறுவோம்…

*ஓம் குருவே சரணம்…
*ஓம் குருவே சரணம்…

*ஓம் குருவே சரணம்…

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s