மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில், உலக நாயகனான சோமசுந்தரக்கடவுள் சித்தர் வடிவம் எடுத்து மதுரையின் எல்லாப்பகுதியையும் சுற்றி வருகிறார். அப்போது அவர் கிழவனைக் குமரனாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும், இரும்பை தங்கமாக்கியும், முடவனை நடக்கவைத்தும், ஊமையை பேசவைத்தும், ஊசியை நிறுத்தி அதன் மேல் கால் பெருவிரலால் ஆடியும் பல சித்து விளையாட்டுக்களை செய்து காட்டி மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேகப் பாண்டியன் இவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினான். வந்தவர்களும் இவரது சித்து விளையாட்டை பார்த்து பிரமித்துப்போய் விடுகின்றனர். அழைக்கச்சென்றவர்கள் வராமல் போகவே, தன் அமைச்சரை அனுப்பி சித்தரை அழைக்க அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனால் எனக்கென்ன பயன், என்னைப்பார்க்க வேண்டுமானால் அரசனை வரச்சொல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார்.
மன்னர் தன்னைப்பார்க்க வருவதை அறிந்த சித்தர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து கொள்கிறார். (இவர் அமர்ந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னதிக்கு அருகில் உள்ளது) அரசனுடன் வந்த ஆட்களால் சித்தரின் நிஷ்டையை கலைக்க முடியவில்லை. கலைக்க சென்றவர்களில் கைகள் தூக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது. அதிர்ந்து போனான் அரசன்.
சித்தரிடம் பணிவுடன் “”சித்தர் பெருமானே தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி? தங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள். அத்துடன் தாங்கள் உண்மையிலேயே சித்தர் தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது” என்று கூறினான். சித்தர் உருவிலிருந்த சோமசுந்தரர், நிஷ்டையிலிருந்து கண்விழித்து அரசனே “” நான் தான் அனைத்தும், நானே ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டை காட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்கும் என் பெயர் “எல்லாம் வல்ல சித்தர்’ என்றார். ஆனாலும் நம்பிக்கையில்லாத அரசன், “”தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல்யானையை தின்ன செய்யுங்கள்” என்றான். சித்தரும் அமைதியுடன் அருகிலிருந்த கல் யானையை பார்த்து கண் அசைக்க யானை சடாரென அரசனிடமிருந்த கரும்பைத்தின்றது.
அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர். சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம் போல் ஆனார்கள். உண்மை நிலையறிந்த அரசன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையை பொறுத்து, மன்னித்தருள வேண்டும். சித்தரும் மன்னித்து, நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்கு தேவையானதை கேள் என்றார். இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கி கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். எல்லாம் வல்ல சித்தருக்கு ஆலயத்தில் பணம் கட்டினால் பூக்கூடார சேவையில் கலந்து கொள்ளலாம். பக்தியுடன் செய்யும் காரியங்களில் இறைவன் இருக்கிறான்.