ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி மற்றும் பாரதி தீர்த்த ஸ்வாமிகள்

image

image

இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் மகா பெரியவா எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்” ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது! –

ஒரு பழைய சக்திவிகடன் கட்டுரை. ”இன்று அக்டோபர் 25, 1992. காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994-ல்தான் அவர் நூறாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்தத் தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்ன என்றால், இரண்டு ஞானிகளின் பெயர்களும் ‘சந்திரசேகர’ என்பதுதான். அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான்.

காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில், பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும், அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள்; அதே நேரம் ஒப்பிடக்கூடியவர்களும்கூட!

மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க வைக்கும் அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக் கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும், சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறாமல், எதிர் நீச்சல் போடுபவர்கள். ‘ஜகத்குரு’ என்ற பட்டத்தை அவர்களாகத் தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை. இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே, ‘குரு என்று ஒருவர் தேவை’ என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே ஒரே மாதிரிதான்.

ஆனால், அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும், செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர். முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும். காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும், வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல் பட்டார். அதை அடைய செயல் திட்டங்கள் தீட்டினார். சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆசார்யர், பொதுவாகத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால், அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால் தெய்விகம், ஆன்மிகம் தவிர, வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை. மதம், சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில், மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்டமாட்டார்.

ஆதிசங்கரர் காலம் அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்னைகளிலும், அல்லது வித்யாரண் யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங் களிலும்… ‘இதில் உண்மையைக் கண்டு பிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மிக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ?’ என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும். மாறாக, காஞ்சி முனிவரோ, எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன், தாமே நவீன அறிவியல் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.

ஆசார்யர்கள் இருவரும் ஒருவரையருவர் சந்திக்கா விட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர். ‘தங்கள் திட்டங்களைக் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரி¢மாற்றங்கள் செய்துகொண்டனர்’ என்று கே.பாலசுப்ர மணிய ஐயர், எல்.எஸ்.பார்த்தசாரதி ஐயர் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார்யர் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்துச் சொன்னது உண்டு. காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும், அவர்களை மிக மரியாதையாக நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச் செல்லத் தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆசார்யர். ‘இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவருடைய தபஸின் மகிமை!’ என்று அவரைப் பற்றி மகா பெரியவாள் சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு. சிருங்கேரி ஆசார்யரோ காஞ்சிப் பெரியவர் பற்றி, ‘அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்குக் காரணமாக இருக்கிறது!’ என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணசுவாமி ஐயர்.

இவர், பெரியவா பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927-ல் தங்கியிருந்தபோது, அங்கே சென்று திருப்புகழ் பஜனைகள் செய்தார். பெரியவா இவருக்குத் ‘திருப்புகழ் மணி’ என்று பட்டம் கொடுத்தார். அதன் பிறகு திருப்புகழ் மணி, கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆசார்யர் முன்பும் திருப்புகழ் பஜனைகளைச் செய்தார். இவருக்குக் காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றிக் கேள்விப்பட்டதும், ‘அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால், அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்!’ என்றாராம் சிருங்கேரி ஆச்சார்யர்.

இன்னொரு விசேஷம் என்னவென்றால், 1927-ல் பெரியவா கோயமுத்தூருக்கு விஜயம் செய்தபோது, அவர் முகாமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்! 1935-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மந்திரேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4-வது நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார். சுவாமிகளுக்கு வந்ததே கோபம். ‘உன் மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய். ஒரு கணம்கூட என் கண் முன் நில்லாதே. திரும்பிப் போய்விடு!’ என்று அவரைக் கடிந்துகொண்டாராம்!

Advertisements

One thought on “ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி மற்றும் பாரதி தீர்த்த ஸ்வாமிகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s