ஜெய் சீதாராம்

image

இது அயோத்தி!

ராவண வதம் முடிந்து, நாடு திரும்பி, பட்டாபிஷேகம் நடந்து விட்டது. வந்த 
விருந்தினர்கள், அனைவரும் திரும்பிவிட்டார்கள்,

ஹனுமனைத் தவிர. ஏன்?

‘தங்களை தரிசித்தபடி தங்கள் திருநாமத்தை ஜபித்தபடி, இங்கேயே இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டான் ஹனுமன். ராமனும் சம்மதித்துவிட்டான்.

பிரம்மச்சர்யம், ஞானம், ஆற்றல், வீரம், சாதுர்யம், பக்தி… என்று 
விரும்பத்தக்க குணங்களின் கூட்டாக இருந்தாலும் அடக்கமே உருவாக, பணிவே தோற்றமாக விளங்கிய ஹனுமனின் செயல், ராமனை இளக்கியது. தொண்டுக்கு ஒரு தூயவனாய், பலனை எதிர்பார்க்காத பவித்ரமாய் திகழ்கிறான். அதனால், வெண்ணெய் இளகுவதுபோல் ராமனின் இதயமும் இளகியது. அதைக் கவனித்துதான் சீதையும் கேள்வி 
எழுப்பினாள்.

“பிரபு, தாங்கள் இன்னமும் தங்களை ஒளித்துக்கொள்ள வேண்டியது அவசியமா? தங்களை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ளலாமே…!”

“ஆம் தேவி. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். என்னவென்று வெளிப்படுத்த? 
அதைத்தான் யோசிக்கிறேன்…” என்று மர்மமான புன்னகையை அடுத்துச் சொன்னான் கருணையே வடிவான காகுத்தன்!

“தேவி, இந்த ஹனுமன் எந்தவிதமான களங்கமும் இல்லாதவன்; பரிபூரண ஞானத்தை அடையத் தகுந்தவன்; நம்மிடம் மாசில்லாத பக்தி கொண்டவன்; பலன் கருதாது பணி செய்யும் பெரும் யோகி; இவனுக்கு நீ ஏன் தத்துவோபதேசம் செய்யக்கூடாது?”

சீதையின் முகம் ஆனந்தத்தால் விகசித்தது. ஸ்ரீராமனை தன் விழிகளால் நோக்கிச் சொன்னாள்: “தங்கள் நோக்கம் புரிகிறது பிரபு. நானும் உபதேசிக்க வேண்டும் இல்லையா?” என்று கேலி இழையோடக் கேட்டவள், சொல்ல ஆரம்பித்தாள்.

அந்த ‘உம்’காரத்தில் ஒளிந்திருக்கும் உட் பொருள்தான் என்ன? பெருமானும் 
தேவியும் உரிமையால் பேசிக்கொள்வதன் பொருள் புரியாமல், இலக்குவனும் ஹனுமனும் பார்த்தபடி நின்றார்கள்.

“ஹனும! ஸ்ரீராமனின் திருவுள்ளம் உன் மேல் கனிந்திருக்கிறது. அவர் யார்? 
அவர்தான் பரம் பொருள்! அனைத்துமாகவும், அனைத்துக்குள் ஊடுருவியுள்ள உட்பொருளாகவும், அவற்றில் பந்தப் படாமலும் இருக்கும் முதற்பொருள். 
மாறுதலற்றவர். அவருடைய சக்தியின் விசேஷமாகவே நான் செயல்படுகிறேன் என்பதை 
அறிந்துகொள்வாயாக…”

சீதை பேசப்பேச, லக்ஷ்மணன் கரங்குவித்து நின்றான். ஹனுமன், மேலும் பவ்யமாக வணங்கிக் கேட்க ஆரம்பித்தான்.

ஜனகனின் மகளாக உலவிய சீதை, மாயாஸ்வரூபிணி. பரம் பொருளின் செயல்கள் அவள்
மூலமாகவே நிகழ்கின்றன என்பதை அதுவரை உணர்ந்திராததால், ஆச்சர்யமும் 
பிரமிப்புமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

சீதையைத் தொடர்ந்து ஸ்ரீராமனே பேச ஆரம்பித்தான்:

“ஹனும, பரம்பொருளான ஒரே ஆத்மாதான் எல்லா வடிவங்களிலும் தனித்தனி ஆத்மாவாகத் 
தோன்றுகிறது. உண்மையில் இருப்பது ஒன்றுதான். வெவ்வேறாகத் தோன்றுவது மாயை 
காட்டுகின்ற அற்புதம்! இதை உணர்ந்து கொள்பவனே என் பக்தன். அவனே என்னை
உணர்கிறான். இதைப் புரிந்து கொள்ளாத எந்த சாஸ்திர அறிவும், பூஜைகளும், 
தவங்களும் என்றும் என்னை அடைய வைக்காது.”

பெருமானும் பிராட்டியும் சொல்லச் சொல்ல வணக்கமுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஹனுமன். தேவி கேட்டாள்:

“பிரபு, தாங்கள் ஹனுமனுக்கு உபதேசம் செய்ய நினத்ததது சரி. என்னையும் சொல்லப் பணித்தீர்களே, அது ஏன்?”

குறும்புச் சிரிப்புடன் சொன்னான் ராமன்:

“தேவி, ஹனுமன் பரமபக்தன், அவனுக்கு என்னுடைய அருள் பரிபூரணமாகக் 
கிடைக்கும். ஆனால், உன்னுடைய அருளும் அவனுக்குத் தேவை. மாயாஸ்வரூபிணியான
நீயே அவனுக்கு உபதேசம் செய்து, குருவாகவும் ஆகிவிட்டாய். இனி வேறு எது அவனை 
தடுமாற வைக்க முடியும்?” சீதை தொடர்ந்து கேட்டாள்:

“அப்படியானால், தாங்களும் ஏன் உபதேசம் செய்தீர்கள்?”

“புரியவில்லையா? யார் மாயைக் கடந்து நிற்கிறார்களோ, யார் ஞானத்தை 
எய்திவிட்டார்களோ, அவர்கள் முன் பரம்பொருள் தாமாகவே, குருவாக வந்து 
குடிகொள்ளும். சீடனின் பக்குவமே குருவை அவனிடம் சேர்ப்பிக்கிறது. 
அதனால்தான், நானும் உபதேசித்தேன்.”

ஹனுமனின் விழிகளில் ஆனந்தப் பரவசம்!

ஸ்ரீராமனின் கருணைதான் எவ்வளவு பெரியது? நினைத்த மாத்திரத்தில் எதையும் 
செய்யும் வல்லமை கொண்டவன். தன்னையும் ஒரு பொருட்டாகக் கருதி கணையாழி 
தந்தனுப்பினான். அவன் தேவியோ, மரத்தடியில் ஏதுமே அறியாத பெண்போல கண்ணீர் 
சிந்தி இளைத்தாள். தான் செய்த உதவியை எண்ணி மகிழ்வதாகச் சொல்லி 
பூரித்தாள்…

கடல் கடந்தது, போர்க்களம், ராவணன் மரணம், பட்டாபிஷேகம்… என்று அடுத்தடுத்த சம்பவங்கள், சீடனின் மனத்திரையில் ஓடின…

“எல்லாம் செய்ய வல்ல அவர்கள், என்னை ஒரு கருவியாகக் கொண்டு, என் மூலமே 
அந்தச் செயல்களைச் செய்தார்கள். ஆனால், நான் செய்ததாகச் சொல்லி, என்னைப் 
புகழ்ந்தார்கள். ஆ… தன்னை ஒளித்துக்கொண்ட இந்தத் தெய்விகத்தின் சக்திக்கு 
முன்னால், நான் இன்னமும் குழந்தைதான்…”

ஹனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. தன்னை 
மறந்து, ‘ஜெய் சீதாராம்’ என்று பாட ஆரம்பித்தான். கணீரென்று ஒலித்தக் 
அந்தக் குரல், திசையின் முகடுகளில் பட்டு, காற்றை நிறைக்க ஆரம்பித்தது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s