பக்தரின் அனுபவம்

image

அன்புடையீர்,

நமஸ்காரம்.

மகா பெரியவா சரணம்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

‘கலியுக தெய்வமாக நம்மிடையே விளங்கி வருகின்ற மகா பெரியவா சத்தியமான தெய்வம்… இன்றைக்கும் – என்றைக்கும் அவர் இருந்து கொண்டு நம்மை எல்லாம் வழி நடத்துகின்றார் – வழி நடத்துவார். இதில் கொஞ்சமும் சந்தேகம் கூடாது’ என்று நான் சொற்பொழிவாற்றுகின்ற இடங்களில் எல்லாம், பக்தகோடிகளின் மத்தியில் பெரியவா பக்தியும், பெரியவா மேல் ஒரு நம்பிக்கையும் வர வேண்டும் என்பதற்காக உதாரணங்களுடன் பேசுவேன். இதற்குக் கடந்த கால உதாரணங்களுடன் நிகழ்கால உதாரணங்களையும் அவ்வப்போது குறிப்பிட்டுச் சொல்வதுண்டு.

(29.2.2016 திங்கள்) அன்று எனக்கு ஏற்பட்ட ஒரு பர்ஸனல் அனுபவத்தை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிக அவஸ்யம் என்று நினைக்கிறேன்.

அதிகாலை என் மனைவியுடன் என் இல்லத்தில் இருந்து (சென்னை) புறப்பட்டு டிராவல்ஸ் வண்டியில் கும்பகோணம் செல்வதாகத் திட்டம். நேராக கும்பகோணம் மகாமக குளத்தில் ஸ்நானம் (நான் மட்டும் சில நாட்களுக்கு முன் ஸ்நானம் செய்து விட்டேன். தற்போது மனைவியுடன்). பிறகு, அங்கிருந்து சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு திருவையாறு, அரியலூர் வழியாக சிறுவாச்சூர் சென்று ஸ்ரீமதுரகாளியம்மனையும் தரிசிக்கலாம் என்று எண்ணம். எல்லாவற்றையும் முடித்து விட்டு இரவு வீடு திரும்பி விடலாம். இதுதான் திட்டம்.

காஞ்சியில் மகா பெரியவா அதிஷ்டானம், ஓரிக்கை மணி மண்டபம் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது சென்னை சேலையூரில் எனக்குத் தெரிந்த ஒரு பூக்காரரிடம் இருந்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மாலைகளை வாங்கிச் செல்வேன். இந்த பாக்கியத்தை மகா பெரியவா ஒவ்வொரு முறையும் எனக்குக் கொடுத்து வந்தார். மிகவும் நேர்த்தியாக பக்தி சிரத்தையுடன் இவர் கட்டித் தரும் ஒவ்வொரு மாலையும் அற்புதமாக இருக்கும்.

‘சுவாமிமலை மற்றும் சிறுவாச்சூர் செல்கிறோமே… ஸ்வாமிநாத ஸ்வாமிக்கும், மதுரகாளியம்மனுக்கும் விசேஷமாக இது போன்ற மாலைகளை இவரிடம் இருந்து வாங்கிச் செல்லலாமே’ என்று ஏனோ மனதில் தோன்ற, என் பூக்காரரிடம் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஆறடி உயரத்தில் கெட்டியான மாலையும், மதுரகாளி அம்மனுக்கு ஐந்தடி உயரத்தில் கெட்டியான மாலையும் தயாரித்து முதல் நாள் இரவு (28.2.16 ஞாயிறு) கொடுக்கச் சொல்லி இருந்தேன்.

ஆனால், 28.2.16 ஞாயிறு அன்று மதியம் சென்னை லயன்ஸ் கிளப்பில் சீஃப் கெஸ்ட்டாக (எழும்பூர் அம்பாஸடர் பல்லவா ஓட்டலில்) கலந்து கொண்டு ‘உன்னால் முடியும்’ என்ற தலைப்பில் பேசுமாறு ஒரு அழைப்பு. அன்றைய தினம் மாலை குரோம்பேட்டை குமரன்குன்றத்தில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு வேறு இருந்தது.

மதியம் லயன்ஸ் கிளப் உரையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது உடல் நிலை சரி இல்லை. ஒரே அசதி. வீடு வந்து சேர்ந்ததும் முடியவில்லை. எனவே, படுத்து உறங்கினேன்.

மாலை 4 மணிக்கு எழுந்ததும் என் மனைவி, ‘‘உங்களுக்கு ஒடம்பு சரி இல்லையே… உங்களைப் பார்த்தாலே ஒரே டயர்டா இருக்கு. நாளைக்கு எப்படி முழு நாள் பயணிச்சு கார்ல கும்பகோணம் போக முடியும்?’’ என்று கேட்டாள்.

‘‘அதான் யோசிக்கிறேன்’’ என்று சொன்னேன்.

‘‘பரவால்ல… நாளைக்குப் போற டிரிப்பை கேன்சல் பண்ணிடலாம். கும்பகோணம் அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றாள்.

எனக்கும் அந்த நேரத்தில் அது சரியாகப் படவே… உடனே டிராவல்ஸுக்கு போன் செய்து நாளை கும்பகோணம் டிரிப் கேன்சல் என்று சொன்னேன்.

அடுத்து, பூக்கடைக்காரருக்கு போன் செய்து, ‘‘டிரிப் கேன்சல் ஆயிடுச்சு… ஒருவேளை பூ இன்னும் வாங்கலேன்னா மாலைங்களை கேன்சல் பண்ண முடியுமா?’’ என்று கேட்டேன்.

பூக்கடைக்காரர் வெகுவாகத் தயங்கி, ‘‘சார்… ஒங்களுக்காக ஸ்பெஷலா கோயம்பேட்டுல இருந்து பூ வாங்கியாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல மாலை கட்ற வேலையை ஆரம்பிக்கப் போறோம்’’ என்றார்.

உடனே சுதாரித்து, ‘‘பரவால்லை… மாலைங்களைக் கட்டி முடிச்சு நாளை காலை 8 மணிக்கு வீட்டுல கொடுத்தா போதும். அதுக்கு ஏத்தாற் போல் தயார் பண்ணுங்க’’ என்றேன்.

அவரும் உற்சாகமாக, ‘‘சரி’’ என்றார்.

மனைவியிடம் கேட்டேன். ‘‘கும்பகோணமும், சிறுவாச்சூரும் போகலை. ஆனா, அங்கே இருக்கிற தெய்வங்களுக்குத் தயாரான மாலைங்க காலைல வரப் போகுது. என்ன பண்ணலாம்?’’

அவள், ‘‘நீங்களே சொல்லுங்க’’ என்றாள் என்னிடம்.

எனக்குச் சட்டென்று ஒரு யோசனை. ‘‘நாளைக்கு மதியத்துக்கு மேல காஞ்சிபுரம் போவோம். ஸ்வாமிநாத ஸ்வாமிக்குத் தயாரான மாலை அதிஷ்டானத்துல மகா பெரியவாளுக்குக் கொடுத்துடுவோம். சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குத் தயாரான மாலையை காஞ்சி காமாட்சிக்குக் கொடுத்துடுவோம்’’ என்று சொன்னேன்.

அவள் சட்டென்று கேட்டாள்: ‘‘ஓரிக்கைக்கு?’

இதுவரை காஞ்சி அதிஷ்டானத்துக்குப் போகிறோம் என்றால், ஓரிக்கை இல்லாமல் இருக்காது. அங்கும் மாலை வாங்கிப் போய் முதலில் சார்த்தி விட்டு, அதன் பிறகுதான் காஞ்சி அதிஷ்டானம் செல்வோம். இதுதான் வாடிக்கை

‘‘பரவால்லை… ஓரிக்கையை இந்த தடவை ‘கட்’ பண்ணிடுவோம். ரெண்டு மாலைதானே சொல்லி இருக்கோம். காமாட்சிக்கும், அதிஷ்டானத்துக்கும் மட்டும் போவோம்’’ என்றேன்.

இவளும் முழு மனசு இல்லாமல் சம்மதித்தாள். எனக்கும்தான்!

காரணம் – சமீபத்து நாட்களில் மாலை இல்லாமல் இந்த இரண்டு இடங்களுக்கும் அநேகமாக செல்வதில்லை. எக்ஸ்ட்ரா ஒரு மாலை கைவசம் இல்லாததால், ஓரிக்கையை ‘கட்’ பண்ணி விட்டேன் (நாம் யார் தீர்மானிக்க?!)

அடுத்த நாள் காலை மாலைகள் வந்தன.

அவற்றை வாங்கி பூஜையறையில் வைத்தேன்.

தற்செயலாக பூஜையறைக்குப் போன என் மனைவி வியப்பாகி வெளியே வந்து என்னிடம், ‘‘எத்தனை மாலைகள் வந்துது?’’ என்று கேட்டாள்.

ஏன் இவள் பரபரக்கிறாள் என்று புரியாமல், ‘‘ஏன் பதட்டப்படறே..? ரெண்டு மாலை சொன்னோம். அதன்படி ரெண்டு கொண்டு வந்து கொடுத்திருக்கார்’’ என்றேன்.

அதற்கு அவள், ‘‘பூஜையறைக்குள்ள வாங்க… நீண்ட ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் ஒரு மாலை இருக்கு. இன்னொரு கவருக்குள்ள ரெண்டு மாலைங்க இருக்கு’’ என்றாள்.

‘‘இருக்காதே…’’ என்று சொல்லியபடியே நானும் பூஜையறைக்குப் போனேன்.

வியப்பு!

ஒரு கவரில் ஒரு மாலை. கவருக்கு மேலே பூக்கட்டும் நாரின் இரண்டு முனைகள். அதாவது இரண்டு முனைகளையும் இரண்டு கரங்களில் ஏந்தி அணிவிப்பதற்கு வசதியாக!

இன்னொரு கவரின் மேலே – நாரின் இரண்டு முனைகளுக்குப் பதிலாக நான்கு முனைகள். ஆக, இரண்டு மாலைகள்? கவருக்குள் மெள்ளப் பிரித்துப் பார்த்தாலும் இரண்டு மாலைகள் இருப்பது போல் தோன்றியது.

இது எப்படி இருக்க முடியும் என்று அந்த நான்கு நார் முனைகள் தென்பட்ட கவரை மட்டும் தூக்க முடியாமல் தூக்கி வந்து ஒரு டேபிளில் வைத்து சந்தேகத்துடன் பிரித்துப் பார்த்தால், இரண்டு மாலைகள்!

எங்கள் இருவருக்குமே பிரமிப்பு.

இதுவரை காஞ்சிபுரம் அதிஷ்டானம்  சென்றபோது ஓரிக்கை செல்லாமல் இருந்ததில்லை. இன்றைக்கும் ஓரிக்கை வந்து விட்டு அதிஷ்டானம் செல்லச் சொல்லி மகா பெரியவா உத்தரவு கொடுக்கிறார் போலிருக்கிறது. அதற்காகவே தனக்கும் (ஓரிக்கை) ஒரு மலர்மாலை சேர்த்து வைத்து அனுப்பி இருக்கிறார் போலிருக்கிறது என்று தோன்றியது!

எல்லாம் நன்மைக்கே என்று தீர்மானித்து, ஓரிக்கைக்கு ஒரு மாலை, பெரியவா அதிஷ்டானத்துக்கு ஒரு மாலை, காஞ்சி காமாட்சிக்கு ஒரு மாலை என்று முடிவெடுத்தோம்.

மதிய வேளையில் நாங்கள் சொல்லி வைத்த டயத்தில் டிராவல்ஸ் வண்டி வந்தது. மாலைகளை வண்டியில் ஏற்றி விட்டு, பயணம் தொடங்கியது.

முதலில், ஓரிக்கை. எங்களது முந்தைய பயணத்தில் இல்லாத இடம்.

இரண்டு மாலைகள் இருக்கின்ற கவரில் இருந்து ஒரு மாலையை எடுக்கலாம் என்று என் மனைவி பிரித்தபோது அதிர்ந்தாள். பரபரப்போடு என்னைக் கூப்பிட்டாள். ‘‘ரெண்டு மாலை இருந்த கவர்ல ஒரு மாலைதான் இருக்கு.’’

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இது மகா பெரியவா திருவிளையாடல் என்று மட்டும் மனசுக்குள் ஓடியது.

வீட்டில் இரண்டு மாலை… ஓரிக்கையில் பிரித்தால் ஒரு மாலை… இது எப்படி சாத்தியம்?

‘எப்பவும் நீ ஓரிக்கைக்கு வந்து மாலை அணிவித்து விட்டுப் போவாய். இன்னிக்கு என்னை விட்டுட்டுக் காமாட்சி அம்மனுக்கு ஒரு மாலைன்னு புதுசா தீர்மானிச்சிருக்கே. ஒன்னை இங்கே வரவழைக்கத்தான் அந்த ஒரு மாலையை ரெண்டு மாலையா ஒங்களுக்குக் காண்பிச்சு இங்கே வரவழச்சேன். அது ஒரே மாலைன்னு ஒங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சா, நீ ஓரிக்கைக்கே வராம காமாட்சி அம்மன் கோயிலுக்கும் அதிஷ்டானத்துக்கும் போயிட்டுப் போயிடுவே’ என்று சொல்லாமல் சொல்வது போல் பட்டது.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் எங்களுக்குள் ஏற்படுத்திய சிலிர்ப்புகள் அடங்க, வெகு நேரம் பிடித்தது.

ஓரிக்கையில் பூஜை செய்து வரும் கணபதி மாமாவிடம் மட்டும் இந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

அவர் சொன்னார்: ‘‘ஸ்வாமிநாத ஸ்வாமியும் நான்தான். மதுரகாளியும் நான்தான். காமாட்சியும் நான்தான்னு அவர் சொல்லாமல் சொல்றார். மகா பெரியவா பிரத்யட்சம் அப்படிங்கறதுக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் சொல்ல முடியும்.’’

இருந்த இரண்டு மாலைகளில் பிரமாண்ட மாலை ஓரிக்கைக்கு. அந்த மாலையை இன்று அனுஷத்தின்போது மகா பெரியவாளுக்கு அணிவிக்கப் போவதாக கணபதி மாமா சொன்னது கூடுதல் சந்தோஷம்.

பிறகு, பெரியவா அதிஷ்டானத்தில் இன்னொரு மாலையை சமர்ப்பித்து விட்டு, அவரையே ஸ்வாமிநாதனாகவும், மதுரகாளியாகவும், காமாட்சியாகவும் தரிசித்து விட்டு இல்லம் திரும்பினோம்.

மகா பெரியவா கண் கண்ட தெய்வம் என்பதற்கு இதை விட நிரூபணம் தேவை இல்லை. எப்படி எல்லாம் நம் கண்களைக் கட்டி விட்டு அவர் லீலைகள் நிகழ்த்துகிறார் என்பதை அனுபவித்தபோது வியந்தேன்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s