நாராயணீயம்

குருவாயூர்  அப்பனின் நாராயணிம்  உருவான அருமையான  வரலாறு

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ”ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா” என்று கோபாலனை அனுப்பினார்.

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

”என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ”

” ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது” என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது”

”அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?”

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ”புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்” என்றான்.

”குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?” கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ”கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ”

”ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்” என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.” ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. ” ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா” என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.

”ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ”மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.

”மத்ஸ்யம் தொட்டு” என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.” அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.

”ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு…………” என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ”

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

”நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? ” என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ”எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்” — பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்” என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். ” ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்” — அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, ” என் கண்ணா” என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ”ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!” என்று கதறுகிறார்.

” இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா” என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

” சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு” என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

”நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?”

” அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ”

” பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி” என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் ‘நாராயண பட்டத்ரி மண்டபத்தில்’ உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, ‘நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்” என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ”மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ”பட்டத்ரி மண்டபம்” என்று பேர்” குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

” நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,
” உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.
” நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்”

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம்

“ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்”

Advertisements

One thought on “நாராயணீயம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s