ஐந்து கடமைகள்

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்

இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள,  பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன.

1) வழிபாடு (உபாசனை)
வீட்டிலும் கோவிலிலும் வழிபாடு செய்யவேண்டும். வழிபாட்டு விதிமுறைகளைப் பற்றி ஆகமநூல்கள் விளக்குகின்றன. வழிபாட்டில் ஈடுபடும் போது கலாச்சார உடைகள் அணியவேண்டும். வழிபாடு என்பது தூய்மையானதாகவும் எந்தவொரு சுயநல எண்ணமும் அற்றதாகவும் இருக்கவேண்டும். தானும் வழிபாட்டில் ஈடுபடவேண்டும், மற்றவர்களையும் வழிபாட்டில் ஈடுபட வழிகாட்ட வேண்டும். ஒருவனை வழிபாட்டில் ஈடுபட விடாமல் தடுப்பதை விட கொடிய கர்மவினை கிடையாது. உபாசனை என்பது வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி தியானத்தையும் குறிக்கும். உபாசனை என்றால் ‘அருகில் அமர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தல்’ எனப் பொருள்படும். ஆராதனைகளும் வழிபாடுகளும் முடிந்த பின்னர், பூஜை அறையிலும் கோவில்களிலும் அமர்ந்து (நாமஜபத்தால் இறைவனுக்கு மிக அருகில் மனத்தைக் கொண்டுவந்து) தியானத்தில் ஈடுபடவேண்டும். இவ்வாறு முழுமையான வழிபாட்டில் ஈடுபட வேண்டியது இந்துக்களின் முக்கிய கடமை.

2) திருவிழா (உத்சவம்)
உத்சவம் என்றால் ’துன்பங்களை நீக்கும் நாள்’ எனப் பொருள்படும். பெரும்பாலும் பாரத நாட்டு திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாகவும் மகிழ்ச்சிப் பொங்கும் மங்கல திருநாட்களாகவும் திகழ்கின்றன. இந்நன்னாட்களை மக்கள் களிப்போடு ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். ஒருவனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் தான் துன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. அதேபோல் மனத்தில் விதைக்கவேண்டிய நற்குணங்கள் இன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒருவனுக்குத் துன்பங்களை விளைவிக்கும் தீய எண்ணங்களை நீக்கும் நாட்கள்தான் திருவிழா என்றழைக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தைப்பூசம், சித்திரை திருவிழாக்கள் போன்றவை எல்லாம் பின்னணியில் தீமைகளை அழித்து நன்மைகளை விதைத்தல் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் பல புராணக் கதைகள் மூலமாக இதை நமக்கு உணர்த்த முற்பட்டனர். ஆகவே, திருநாட்களில் துன்பங்களை நீக்கி இன்பமாக இருக்கவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.

3) அறநெறி (தர்மம்)
வயதில் முதியவர்களை மதித்தல், பெற்றோர்களை தெய்வத்திற்கு நிகராக போற்றுதல், சுயநலமான செயல்களையும் எண்ணங்களையும் துறத்தல், மற்றவர்களின் நலனுக்காக செயல்கள் ஆற்றுதல், தீமையானவற்றை செயலாலும் மனத்தாலும் மேற்கொள்ளாமலிருத்தல், இனிமையான பயன்தரும் சொற்களையே பேசுதல், சான்றோர்களின் சொற்களைப் பின்பற்றுதல், எல்லோரையும் சமமாகப் பார்த்தல், உயர்வுதாழ்வு மனப்பான்மையின்றி எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் குடியிருக்கிறான் என்பதை அறிந்து தெளிவான நோக்கத்தோடு செயல்பட வேண்டும். இவ்வாறு தர்மநெறியில் செயல்படவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.

4) யாத்திரை (தீர்த்தயாத்திரை)
தீர்த்தம் என்றால் புனித தலம் எனப் பொருள்படும். புனித தலங்களுக்கு நீண்ட பயணம் மேற்கொள்வது தீர்த்தயாத்திரை என்றழைக்கப்படுகின்றது. யாத்திரை மேற்கொள்வது ஆன்மிகவலிமையும் மனோவலிமையும் தரும். தீர்த்தயாத்திரை தலங்கள் பெரும்பாலும் தெய்வத்துடனும் தெய்வீக மனிதர்களுடனும் தொடர்புடையதாக அமைந்திருக்கும். இத்தகைய இடங்களில் பல மகான்கள் தெய்விகத்தை உணர்ந்து முக்திநிலை அடைந்திருப்பார்கள். ஆதலால் இத்தகைய இடங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள புராணங்கள் ஊக்குவிக்கின்றன. தீர்த்தயாத்திரையின் போது ஒருவன் பல தடைகளைக் கடந்து தன்னுடைய இலக்கை அடைகின்றான். அதுபோலவே வாழ்க்கை எனும் பாதையில் மெய்யுணர்வு எனும் குறிக்கோளை அடைய ஒருவன் பல தடைகளையும் சவால்களையும் கடந்துவர வேண்டும். தீர்த்தயாத்திரை தலங்களின் அதீத தெய்வசக்திகள் ஒருவனின் மனத்திலிருக்கும் தீமைகளை நீக்கி அவனை நேர்வழியில் தர்மநெறியோடு செயல்பட உதவுகின்றன. ஆகவே, யாத்திரை மேற்கொள்வது இந்துக்களின் கடமையாகும்.

5) அர்த்தமுள்ள சடங்குகள் (சமஸ்காரம்)
ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ள வேண்டிய சில அர்த்தமுடைய சடங்குகளை இந்துதர்மம் வரையறுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக, வளைக்காப்பு, பெயர்சூட்டுதல், முடிநீக்குதல், காது குத்துதல், பள்ளியில் சேர்த்தல் போன்ற 16 சடங்குகள். சமஸ்காரம் எனும் சொல் ‘முழுமையான நிறைவு அடைதல்’ அல்லது ‘தயார்ப்படுத்துதல்’ எனப் பொருள்படும். இச்சடங்குகள் ஒருவனின் கர்மாவோடு தொடர்புடையவை என யோகசாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. சடங்குகள் பெரும்பாலும் புறம் மற்றும் அகம் எனும் இருநிலையிலும் ஒருவன் மேற்கொள்ள வேண்டியவை ஆகும். கௌதமர் தர்மசூத்திரம் (8:22), 8 அக சடங்குகளைக் குறிப்பிடுகின்றது. அவை: எல்லா உயிர்களிடமும் கருணை, பொறுமை, பொறாமை இல்லாமை, தூய்மை, தெளிவு, நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருத்தல், தாராளகுணம், பேராசை இல்லாமை. அடுத்த வரியில் (8:23) “எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு இந்த எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்று போகின்றன. ஒருசில புற சடங்குகள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த அர்த்தமுள்ள சடங்குகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமையாக அமைந்துள்ளன.

இந்த ஐந்து கடமைகளும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியவை.

Advertisements

One thought on “ஐந்து கடமைகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s