காக்கா முட்டை

image

இக்காலத்தில் சில குழந்தைகளின், ‘ஐக்யூ’ பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. b
சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:
சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.
சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, ‘ஸ்வாகா’ செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.
தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, ‘இது என்ன கதை மிஸ்?’ என்றாள்.
‘இது தான் நீதிக்கதை…’ என்றேன்.
‘இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?’ எனக் கேட்டாள். ‘தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி…’ என்றேன்.
‘அதுக்காக காகம் என்ன செஞ்சது?’ என்றாள்.
‘ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது…’ என்றேன்.
உடனே, அக்குழந்தை, ‘ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே… அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்… திருடறது தப்பு இல்லயா?’ எனக் கேட்டாள்.
குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘திருதிரு’ வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்…
‘என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்… பாம்பும் ஒரு உயிர் தானே…’ என்றாள்.
நானும், ‘தப்பு தான்!’ என்றேன். உடனே, ‘இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா?’ எனக் கேட்டாள்.
வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?
அக்குழந்தை, ‘காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?’ எனக் கேட்டாள். ‘தோணலியே கண்ணு…’ என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, ‘குட்டிமா… இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்…’ என்றேன்.
உடனே அது, ‘இருக்கே!’ என்று கூறி, ‘காகம் சாது; பாம்பு துஷ்டன். ‘துஷ்டனை கண்டா தூர விலகு’ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க… அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்… அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல…’ என்றாள்.
இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.
நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, ‘பிளைண்ட்’ டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s