கண்ணன் கதை

image

பார்வையிலே சேவகனாய் !!

கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு ஒரு கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.

அவள் வளர்ந்ததும் குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள் கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள்.

காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள். எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள், ” கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே” என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.

ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, “பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்” என்றான். அவள், “நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?” என்றாள். அவனோ,”நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்” என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம் கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை’ ” உன்னி” என்று அன்புடன் அழைத்தாள்.

வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.

குரூரம்மாவின் அடுத்த வீட்டில் ‘செம்மங்காட்டம்மா’ என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.

பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள். குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த

செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,”ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்ட குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, ‘உன்னி’ யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,”கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்” என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், “அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே” என்றாள். அவனும்,” நீ ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.

செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக அதை ஏற்று அங்கே சென்றார். ‘உன்னி’ வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.

எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் ‘உன்னி’ அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல் மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் ‘உன்னி’யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் ‘உன்னி’யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார். இப்போதும் பூக்கள் ‘உன்னி’யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே ‘உன்னியாக’ வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.

அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து நிறுத்தினான். “நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது ‘உன்னியாகவே’ இருக்க விரும்புகிறேன்” என்று கண்ணன் அவர் காதருகில் கூறுவது கேட்டது.

பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.

குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்

“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்” என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றது.

“கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்”!

Advertisements

One thought on “கண்ணன் கதை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s