அருணாசல சிவ

image

கருணை தெய்வம் காஞ்சி மகான்
”உடல் சிரமம், புயல்- மழை என எது வந்தாலும், பகலோ ராத்திரியோ எந்த நேரமாக இருந்தாலும், மகா சுவாமியைத் தரிசிக்கவேண்டும் என்று தோன்றிவிட்டால், உடனே கிளம்பிவிடுவார், பிரதோஷம் மாமா. வீட்டிலிருந்து சுமார் 4 கி.மீ.
தூரத்தில் உள்ள மடத்துக்கு, சிவநாமத்தைப் பாடியபடியே வந்து, பெரியவாளைத் தரிசிப்பதைப் பெரும்பேறாகக் கருதியவர், இவர்” என்கிறார் ‘பிரதோஷம் மாமா’வின் உறவினரான அகிலா கார்த்திகேயன். 
பிரதோஷம் மாமாவின் இயற்பெயர், வெங்கட்ராமன். சேலம் மற்றும் சென்னையில் ரயில்வேயில் பணிபுரிந்த வெங்கட்ராம ஐயர், பிரதோஷம்தோறும் காஞ்சி மடத்துக்கு வந்து, பெரியவரைத் தரிசித்துச் செல்வாராம். இதைக் கவனித்துவிட்டு மகாபெரியவரே ஒருநாள், ‘பிரதோஷம் தவறாம வர்றவன்தானே நீ?!’ என்று கேட்க, அது முதல் அவரின் பெயருடன் ‘பிரதோஷம்’ ஒட்டிக்கொண்டதாம். பிறகு இவர், காஞ்சியிலேயே வசித்து வந்தாராம். இவரைப் பற்றி, அகிலா கார்த்திகேயன் சொன்ன தகவல்கள் சிலிர்ப்பானவை!
ஒருமுறை, பயங்கர மழை! அரசாங்கம், வெள்ள அபாய எச்சரிக்கையே விடுத்திருந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யாமல், வழக்கம்போலவே கிளம்பி 4 கி.மீ. தூரம் பயணித்துத் திரும்பியவரைக் காத்தருளியது மகாபெரியவாளின் பேரருள் அல்லாமல் வேறென்ன?

இப்படித்தான் ஒருநாள், பிரதோஷம் மாமா மடத்துக்குச் செல்லும்போது, திருவரத ஓதுவார் என்பவரும் தெருவில் தன் பரிவாரங்கள் புடைசூழ வந்தாராம். வழிநெடுக, தேவார- திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்று கோஷம் இட்டுக்கொண்டும் ஓதுவாரும் அவருடன் வந்தவர்களும் வர, பிரதோஷம் மாமாவுக்குச் சின்னதாக ஒரு வருத்தம். அவர், ‘அருணாசல சிவ’ எனும் நாமத்தைச் சொல்லியபடியே வருவது வழக்கம். ஆனால், அன்றைக்கு ஓதுவார் பாடியதால், அவர் சொல்வது தடைப்பட்டது.

ஸ்ரீரமணரிடம் அதீத ஈடுபாடுகொண்ட பிரதோஷம் மாமா, ஸ்ரீரமணர் அருளிய ‘அருணாசல சிவ’ எனும் திருநாமத்தை, எல்லோரையும் சொல்லச் சொல்வார். அதேபோல், ஓதுவார் உட்பட அங்கிருந்தவர்களிடம், ‘அருணாசல சிவ’ என்று சொல்லும்படி வலியுறுத்தினார். அதேநேரம் மனதுள் ஒரு எண்ணம்… ‘நமசிவாயமும் அருணாசல சிவமும் வேறு யார்? மகாபெரியவாள்தானே?!’ 
அனைவரும் மடத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசித்தனர். ஓதுவார் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில், ‘ஓதுவார் எங்கே?’ என்று கேட்டார் காஞ்சி மகான். அங்கிருந்தவர்கள், ஓதுவார் சென்றுவிட்டதைத் தெரிவித்தனர். உடனே, பிரதோஷம் மாமாவை அழைத்துப் புத்தகம் ஒன்றைக் கொடுத்த மகாபெரியவர், ”இந்தப் புத்தகம் எந்த வருஷம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா!” என்றார். அந்தப் புத்தகம், திருவாசகம்!
காஞ்சிபுரத்தைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை என்றிருந்த பிரதோஷம் மாமா, மகானின் கட்டளையை  நிறைவேற்ற சென்னை செல்லவேண்டிய நிலை. சென்னையில் ஓதுவாரைத் தேட, ஒரு துணை தேவையாக இருந்தது. தன் மீது அன்பு கொண்டிருந்த அன்பர் ஒருவரை உதவிக்கு அழைக்க நினைத்தார். அன்ப ரைச் சந்திக்கும் பொருட்டு, தான் ஏற்கெனவே வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்றார்.ரிடையர்டு ஆனபிறகு இவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.
மாமாவைப் பார்த்ததும், அங்கிருந்த வேறொரு நண்பர், ”ஆச்சரியமா இருக்கு சார்! கடிதம் எழுதிப்போட்டு உங்களை வரச்சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். உங்களுக்குச் சேர வேண் டிய அரியர்ஸ் பணம் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வந்திருக்கு. நீங்க இன்னிக்கு வரலேன்னா, திரும்பவும் அக்கவுன்ட்ஸ் செக்ஷனுக்கே போயிருக்கும். அப்புறம் வாங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்!” என்றார்.
அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இந்தத் தொகை கிடைப்பதற்கு, மகாபெரியவா சிறிதாக விளையாடி, அருளியிருக்கிறார் எனச் சிலிர்த்தார் பிரதோஷம் மாமா.
ஆனால், இத்தோடு முடியவில்லை ஆச்சரியம்!
பிறகு, சென்னையில் அந்த ஓதுவாரைக் கண்டுபிடித்து, நூல் வெளியிடப்பட்ட விவரத்தைக் கேட்க, ‘தெரியாது’ என்று ஓதுவார் சொல்ல, வேறு சிலர் மூலமாக விவரங்களைச் சேகரித்துக்கொண்டு, மடத்துக்குச் சென்றார் பிரதோஷம் மாமா. அங்கே, இவர் கூறியதையெல்லாம் செவிமடுத்த மகாபெரியவா, திருவாசகப் புத்தகத்தை நீட்டி, ”முதல்லேருந்து சில பக்கங்களைப் படி” என்றார்.
புத்தகத்தை வாங்கிப் பிரித்ததும், ஆடிப் போனார் பிரதோஷம் மாமா. எடுத்ததும், ‘நமசிவாய வாழ்க!’ என்று துவங்கும் சிவ புராணம்தான் தென்பட்டது.
‘அருணாசல சிவனும் நமசிவாயமும் வெவ்வேறல்ல’ என்பதைப் பிரதோஷம் மாமாவுக்கு சூசகமாக உணர்த்தி விட்டார் மகாபெரியவா!

Advertisements

One thought on “அருணாசல சிவ

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s