ஆபத்பாந்தவன்! ரக்ஷ ரக்ஷ

image

பெரியவாளை பிடித்துக் கொண்டவர்கள், பிடித்துக் கொள்ளத் தெரிந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவரால் ரக்ஷிக்கப்படுகிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்வார்கள்.

அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில் பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர், பெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை, ப்ரேமை கொண்டவர். குடும்பத்தோடு அஸ்ஸாமில் இருந்தார்.

வேலையிலிருந்து ஒய்வு பெறும் நேரம் வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய ஸம்பளத்தோடு வேலை தருவதாகச் சொன்னதை அப்படியே நிராகரித்தார்.

எதற்கு?

“ஸம்பாதிச்ச வரை போறும். இனிமே பெரியவா காலடிலதான் என்னோட மிச்ச வாழ்நாள்…..”

இதுதான் அவருடைய அசைக்கமுடியாத முடிவு!

யாருக்கு வரும், இந்த போதுமென்ற மனஸ்?

குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள் கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக, வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே ஒரு பணியாளும் இருப்பான்.

எல்லாரும் ஊருக்கு போன ரெண்டு மூணு நாட்களில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் மெட்ராஸ்ஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ் செய்திருந்தார்.

முந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை அனுப்பிவிட்டார். இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட் வீட்டில்!

நடுராத்ரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை! எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில் ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை!

“ஆபத்பாந்தவா! அனாத ரக்ஷகா! ஆதிமூலமே!….. சந்த்ரஶேகரா!…”

தன்னுடைய தலை மாட்டில் வைத்திருந்த நம் பெரியவாளுடைய படத்தை எப்படியோ கையில் எடுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்…

“பெரியவா…..என்னால மூச்சு விட முடியல….! நீங்கதான் எனக்கு ரக்ஷை! ….”

பெரியவா படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டபடி, கண்களில் கண்ணீரோடு, தாங்கமுடியாத வலியோடு அப்படியே தூங்கிப் போனார்!

மறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது. தூங்கி எழுந்தபோது, படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம் அவருக்கு நினைவுக்கே வந்தது.

அன்று ஊருக்கு வேறு போக வேண்டும் என்பதால், எதற்கும் டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக் கொள்ளலாம் என்று டாக்டரிடம் போனார்.

ECG எடுத்து ரிப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்…..

“உங்களுக்கு நேத்திக்கி night ரொம்ப severe, massive heart attack வந்திருந்திருக்கு!  நீங்க பாட்டுக்கு இப்டி ஆஸ்பத்ரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே? ஆஸ்சர்யமா இருக்கு! உண்மையை சொல்லணுன்னா, நீங்க இந்த maasive attack-ல பிழைச்சிருக்கீங்க-ங்கறதே பெரிய விஷயம்! இப்ப, இந்த ஸெகண்ட, இங்கியே அட்மிட் ஆயிடுங்க…. ஒரு அடி கூட எடுத்து வெக்கக்கூடாது ”

“Massive heart attack” -கிலிருந்து அந்த தீனபந்துவைத் தவிர யார் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்? பயங்கர வலி வந்ததும், இவர் நெஞ்சோடு சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்ட பெரியவா, அப்போவே அவரோட ஹார்ட்டை ஸரி செய்ததோடு, வலியால் அவஸ்தைப்பட்டு தன்னை அணைத்துக் கொண்ட குழந்தையை தூங்கப்பண்ணியும் இருக்கிறார் !

பக்தருக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை! தெய்வத்தின், குருவின், துணையிருந்தால் வேறென்ன கவலை?

“நா… இன்னிக்கே ஊருக்குப் போயாகணும்! என்னோட தெய்வம் என்னைக் காப்பாத்தும்”

அசைக்க முடியாத நம்பிக்கையோடு, அன்றே ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பிவிட்டார்! ஹ்ருதயத்தைத்தான் “Under ஆபத்பாந்தவன் care” என்று குடுத்தாச்சே!

ஊருக்கு வந்ததும், குடும்பத்தாரிடம் ஏன்? மனைவியிடம் கூட, எதுவுமே சொல்லவில்லை. முதலில் பெரியவாளை தர்ஶனம் பண்ண வேண்டும்!

இதோ…..ரெண்டு நாள் முன்பு தன்னைக் காப்பாற்றிய மஹா வைத்யநாதம் அங்கே அமர்ந்து தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தது!

குடும்பமாக எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும், இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே……

“இப்போ ஒடம்பு எப்டியிருக்கு? தேவலையா?…”

மனைவியும் மற்றவர்களும் திகைத்துப் போய்

“ஏன்? ஒங்க ஒடம்புக்கு என்ன?…” என்றனர்.

பெரியவா சிரித்துக் கொண்டே……

“இனிமே ஒடம்புக்கு எதாவுது-ன்னா….பகவானை கூப்டு! போயும் போயும் என்னையா கூப்டுவா?… அன்னிக்கி ஒன்னை பகவாந்தான் காப்பாத்தியிருக்கார்”….

“ஆமா…..பெரியவா…! என்னோட ‘பகவான்’தான் காப்பாத்தினார்!..”

பக்தரும் கண்களில் வழியும் கண்ணீரோடு, தன் பகவானைப் பற்றிய பெருமையோடு, சிரித்துக் கொண்டே கூறினார்.

ஹ்ருதயத்தில் பீடம் போட்டு, நம் பகவானை அதில் அமர வைத்துவிட்டால் போதும்! எக்காலத்திலும் எந்த ஜன்மத்திலும் நம் பகவான் தரும் ரக்ஷை, நம்மை பிறவித் தளைகளிலிருந்து கட்டாயம் காப்பாற்றும்.

பகவான் ஸ்ரீ ராமானுஜர் பெரிய அவதார புருஷர். அவருடைய ஶிஷ்யர்களோ ஆச்சார்ய பக்தியில் உத்க்ருஷ்டமான இடத்தை பிடித்திருந்தனர். ஒருமுறை ஸ்ரீ கூரத்தாழ்வார், தன் ஆச்சார்யனுக்காக பாலை நன்றாகக் காய்ச்சி, கல்கண்டு, ஏலக்காய் எல்லாம் போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.

ஆச்சார்யன், “பகவானுக்காக பால் கொண்டு வந்தாயோ?” என்று ரங்கனை நினைத்துக் கூரத்தாழ்வாரிடம் கேட்டார்.

“ஆம் ஸ்வாமி ! இது, என்னுடைய பகவானுக்காக எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்…” என்று ‘ஆச்சார்யனே தன்னுடைய பகவான்’ என்பதை அழகாக எடுத்துரைத்தார் கூரத்தாழ்வார்.

Advertisements

One thought on “ஆபத்பாந்தவன்! ரக்ஷ ரக்ஷ

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s