ஹரிநாமம்

image

பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். ‘தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயொரு திருநாமத்தை மட்டும், ஒரேயொரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. ‘கேசவா’எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்… அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்… பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

‘அது சரி… பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’என்றும் கேட்கலாம், சிலர்.

மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப்பாய் விரித்திருக்கும். ‘அதெப்படி… ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன… அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்… இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!
கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, ‘ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். ‘ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி…’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயொரு விஷயம்… பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின் மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்ம திருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!

முக்கியமாக ஒன்று… ‘பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், ‘என் தோட்டத்துக்கு வந்துவிடு’என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், ‘என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்… மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான்,  அவன் எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். ‘இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய… குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, ‘அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக… மீனவன், வியாபாரி, மன்னன்… இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, ‘நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, ‘எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’என்று வாழப் போகிறீர்களா?

அதாவது, நீங்கள்… மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.

கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. ‘நான் இன்னார்… என் பெயர் இது… கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?

விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், ‘ஹலோ… என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது… உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s