கர்மவினை

சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும். வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).
→ கர்மா (காரணம் – விளைவு)
கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும். அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.
→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும். அவை:
1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.
2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.
3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.
→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா
இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது. அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது. கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.
ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது. ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே. அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை. கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார். எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும். ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.
→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை – தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் – தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.
வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.
சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?
பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார். எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும். செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும். இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “கர்மவினை

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s