கணவன் மனைவி இணைந்தனர்

image

காஞ்சி மடத்திற்கு   வரும் சில பக்தர்கள் தங்களுக்கு எந்த குறையோ, பிரச்னையோ வந்தால், பெரியவா சந்நிதிக்கு வந்து ஒரு பாட்டம் கொட்டிவிட்டுப் போவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ஒருநாள்  மடத்திற்கு  ஏழை, எளிய,  கூலி  வேலை செய்யும் ஓர் பெண்மணி தரிசனத்திற்கு  வந்திருந்தாள். பெரியவா அன்று மௌன விரதம். எனவே வந்து செல்லும்  பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் வழங்கிக் கொண்டிருந்தார்.  அவ்வப்போது தியானத்தையும் அனுஷ்டித்தார்.

அந்தக் கிராமத்துப் பெண்மணி  கைகூப்பிய படி பெரியவாவை கண்களில் நீர் வழிய தரிசித்துக் கொண்டிருந்தாள். பெரியவா தியானத்தில் இருந்தார். பக்தர்களும் அமைதியாக இருந்தனர்.

அந்தப் பெண்மணி திடீரென்று உதடுகள் துடிக்க பெருங்குரலெடுத்து ‘சாமீஈஈ…  என்று கதறும் குரலில் கத்தினாள். பக்தர்களும், கைங்கர்யம் செய்பவர்களும் அதிர்ந்தனர்.

பெரியவா தியானத்திலே இருந்தார். மடத்துச் சிப்பந்தி ஒருவர் அந்தக் கிராமத்துப் பெண்மணியை நோக்கி கோபமாக, “என்னம்மா இது இப்படிச் சத்தம் போடுறே? ஸ்வாமிகள் தியானம் பண்ணிண்டு இருக்காருல்ல… அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது” என்றார்.

“ஐயா.. என்னை மன்னிச்சிடுங்கய்யா.. சாமீயப் பார்த்து எங் குறையைச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வந்த இடத்துல அவரப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன்” என்றாள் மெதுவான குரலில். “ஸ்ஸ்ஸ்.. இனிமே எதுவும் பேசப்படாது. ஸ்வாமியோட தியானம் முடியட்டும். அவர் கிட்ட பிரசாதம் வாங்கிட்டுப் போயிட்டே இருக்கணும்” என்று கறாராகச் சொல்லி விட்டு நகர்ந்தார் அந்த சிப்பந்தி.

சங்கர சொரூபம் கண்களைத் திறந்தது. கூடி நின்ற பக்தர்கள் பரவசத்துடன் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். பெரியவா பக்தர்கள் கூட்டத்தில் தனித்து தெரிந்த கிராமத்துப் பெண்மணியைப் பார்த்து ‘அருகில் வா’ என்பது போல் வாஞ்சையுடன் சைகை செய்தார்.

முகம் கொள்ளாத பூரிப்புடன் அந்தப் பெண்மணி, பெரியவா சந்நிதியை நெருங்கி அவருக்கு முன் விழுந்து நமஸ்கரித்தாள். பெரியவா குங்குமப் பிரசாதம் வழங்கினார். கண்கள் பனிக்க அதை வாங்கிக் கொண்டவள், “சாமீ.. எம் புருஷனுக்கும் எனக்கும் ஓயாத சண்டை. அவர் போற போக்கே எனக்குப் பிடிக்கலை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் மனசு ஒப்பாம வாழ்ந்திட்டு வர்றேன். சந்தோஷமா நாங்க ரெண்டு பேரும் குடும்பம் நடத்த நீங்க தான் வழி பண்ணனும்” என்றாள் ஒரே மூச்சில்.

பெரியவா கண்களை மூடி ஒரு க்ஷணம் தியானித்து விட்டு, தன் முன்னால் இருந்த மூங்கில் தட்டில் இருந்த ரஸ்தாலி பழம் இரண்டை எடுத்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். அதை பயபக்தியுடன் பெற்று, கண்களில் ஒற்றிக் கொண்டாள். பெரியவா வலது கையை உயர்த்தி ஆசிர்வதித்து விடைகொடுப்பது போல் தலையை அசைத்தார்.

இந்த ஆசிர்வாதத்தில் நெகிழ்ந்த படியே அங்கிருந்து கிளம்பினாள். சரியாக இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். காஞ்சி மடத்தில் கனஜோராக வீற்றிருந்தார் பெரியவா. எண்ணற்ற பக்தர்கள் கூடி இருந்த வேளையில் கணவனும், மனைவியுமாக இருவர் அங்கே வந்திருந்தினர்.

கணவன் ஒரு பசுமாட்டுடன் அதன் கன்றையும் ஓட்டிக் கொண்டு வந்தான். பெரியவா பார்வை படும் இடத்தில் கட்டிப் போட்டான். பிறகு அவனும் அவன் மனைவியும் பெரியவாளின் முன்னால் வந்து கைகளைக் கூப்பியபடி, நெக்குருக நின்றனர்.

அந்தப் பெண்மணியைப் பார்த்து மகான் புன்னகைத்தார், “ வாம்மா… ஊரையே கூட்டற மாதிரி அன்னிக்கு மடத்துல சத்தம் போட்டியே.. இன்னிக்கு உம் புருஷனோட சேர்ந்து வந்துட்டியே” என்று கேட்டு விட்டு சிரித்தார்.

“சாமீ.. நீங்க என்ன மாயம் பண்ணீங்களோ.. மந்திரம் போட்டீங்களோ.. சேருவோமான்னு இருந்த நானும் எம் புருஷனும் சேர்ந்து இன்னிக்கு உங்களை தரிசிக்க வந்திருக்கோம். வரும் போது வெறும் கையோட வரக்கூடாதுன்னு நாங்க ஆசையா வளர்த்த பசுவையும் கன்னுக்குட்டியையும் மடத்துக்கு தானம் பண்ணலாம்னு கூட்டிட்டு வந்திருக்கோம்” என்றாள் அந்தப் பெண்மணி.

“உங்க பார்வையால ஆசிர்வாதம் பண்ணி அந்தப் பசுமாட்டையும், கன்னுக்குட்டியையும் மடத்துக்கு சாமீ ஏத்துக்கணும். அந்தப் பாலை நெதமும் நீங்க குடிக்கணும்” என்று கெஞ்சியவாறு கூறினாள். ஒரு சாமந்தி மாலையை எடுத்து பசுமாட்டின் கழுத்தில் மாலையைப் போட வைத்து அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார் மகான்.

மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு முறை நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று புறப்பட்டனர். இந்தக் காட்சிகளைக் காண நேரிட்ட பக்தர்கள் அனைவரும் பரவசத்தின் உச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.

பெரியவாளிடம் அப்ளிகேஷன் போட்ட இரண்டே மாதத்தில் ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்திருக்கிறது என்றால் சாதாரணமா?

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “கணவன் மனைவி இணைந்தனர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s