கங்கா ஸ்நானம்

image

விஷ்ணு கதை கேட்டால் கங்கை தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்

ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ வினைகளை போக்க ஒரு முறையேனும் காசி சென்று கங்கை தீர்த்தத்தில் நீராட  வேண்டும் என்று கூறுவார்கள். அதன் மூலமாக அனைத்து பாவங்களும் அகன்று விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. கங்கையில் நீராட  முடியாதவர்கள் காலம் முழுவதும், தங்களையும் அறியாமல் செய்த ஒரு பிழையால், அதற்குண்டான பாவ வினைகளை நீக்க வழி உள்ளது. அந்த  வழியை கூறும் கதையை இங்கு காணலாம். கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற  அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார்.

அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு  விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது நூறாண்டு கால  வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு,  தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது தலைசிறந்த பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில்  இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.

அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை. ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக  காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும்  நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர். அவர்கள்  இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக்  கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.

அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில்  உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர். அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4  மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையை கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை  கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார். ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர்.  ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும்.

இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது.  இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை  விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. ஆனால் அந்த  இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள்  பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர். கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது.

அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம்  வரை சென்று விட்டனர் அவர்கள். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. ‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால்  கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று புலம்பத் தொடங்கி விட்டனர்.  பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.  அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி, ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.

மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ  அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்  ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால்  அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில்  நீராட முடியாது’ என்று கூறி மறைந்து விட்டாள். தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது  காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.

அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை  கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர். கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும்  முடியாதது. ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான். ஹரி கதையை படிப்பதன்  வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம்  பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை  என்பதை உணருங்கள்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s