பெரியவா சரணம் !!!
பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.
“இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா? எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே!
எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா!…கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே!…..” கதறினாள். கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.
சன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.
“எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா…ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான்
எனக்கு கதி. நா என்ன பண்ணட்டும்? எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா…..”
அமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்…..
“நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே? அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற
ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை! என்ன பண்ணறேன்னா….பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி! இது ஒண்ணுதான்…ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான
வழி!..” என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லிவிட்டார்.
ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது! இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.
சங்கரம் போற்றி போற்றி !!!
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777
Reblogged this on Gr8fullsoul.
LikeLike