ராஜராஜசோழனின் ஆணவம்

image

திருச்சிற்றம்பலம்.

இராஜராஜ சோழனின் ஆணவம் – கோவில் சொத்து

திருமூலர் திருக்கோயில் குற்றம் என்ற தலைப்பில், ஐந்து பாடல்களில் திருக்கோயிலில் நிகழக்கூடாதவற்றைப் பட்டியல் இடுகிறார். திருக்கோயில்கள் பொது சொத்து. அவற்றில், எந்த ஒரு மனிதரும் உரிமை கொண்டாட முடியாது. அங்கே, எந்த அதிகாரமும் செல்லுபடியாகாது; செல்லுபடியாகக்கூடாது. தனி மனிதர் ஒருவர், கோடிக்கணக்காகச் செலவு செய்து, கோயில் கட்டியதாக வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் அந்தக் கோயிலில் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கக்கூடாது. ‘நான்தான் இந்தக் கோயிலைக் கட்டினேன்’ என்ற எண்ணம் கூட அவருக்கு வரக்கூடாது.

எங்கே இது நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில்தான், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் வாழ்வில் நடந்ததாக ஒரு கதையைச் சொல்லி வைத்தார்கள் நமது முன்னோர்கள். பலவிதமான படிப்பினைகளைச் சொல்லும் கதை அது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது. ‘‘யாரிடமிருந்தும் எந்த உதவியையும் கோயிலுக்காகப் பெறக்கூடாது’’ என்று ராஜராஜசோழன் உத்தரவிட்டு விட்டார். கோயில் மும்முரமாக உருவாகிக் கொண்டிருந்தது. அதாவது, மனம்-மொழி-மெய் என்ற மூன்றும் கோயிலை உருவாக்குவதிலேயே உரமாகச் செயல்பட்டது என்பது பொருள்.

அந்த நேரத்தில், கிழவி ஒருத்தி, அங்கே வேலை செய்து கொண்டிருந்த சிற்பிகள் மற்றைய பணியாளர்கள் என அனைவருக்கும் நீர்மோரும் குளிர்ந்த நீரும் கொடுத்து வந்தாள். அவ்வாறு தினந்தோறும் செய்து வந்த அவளது தொண்டினால், கோயில் பணியாளர்கள் அனைவரும் களைப்பு நீங்கி, சுறுசுறுப்பாகக் கோயிலை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். கோயில் வேலைகள் நிறைவடையும் நேரம் வந்தது. அவ்வளவு நாட்களாக நீர்மோரும் குளிர்நீரும் தந்து தங்களை உபசரித்த கிழவியிடம் தலைமை சிற்பி, ‘‘பாட்டி! நீ எங்களுக்குப் பெரும் உதவி செய்திருக்கிறாய். 

உனக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? கேள்!’’ என்றார். அதற்குக் கிழவி, ‘‘கோயிலெல்லாம் கட்டற சிற்பி நீங்க. உங்க கிட்ட என்னத்தக் கேட்கப் போறேன். முடிஞ்சா, அதோ! அங்க இருக்கிற அந்தப் பெரிய்ய கல்லை, சாமி தலைக்கி மேலே வையி!’’ என்றாள். ஒருசில விநாடிகள் யோசித்த தலைமை சிற்பி, அப்படியே செய்தார். ஆம்! கோயில் கருவறையில் இருக்கும் சுவாமிக்கு மேலே, உச்சியில் கிழவி தந்த கல்லை வைத்து மூடினார். கோயில் வேலைகளை முடித்து, கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தார்கள். 

ஒரு பெரும் கோயிலை, அற்புதமான முறையில் நிர்மாணம் செய்த ராஜராஜசோழன், பெருமிதமான ஆணவத்தோடு படுத்தார். அவர் கனவில் சிவபெருமான் காட்சி அளித்து, ‘‘ஏதோ கிழவி தந்த நிழலில் இருக்கிறேன்’’ என்று கூறி மறைந்தார். சிவபாதசேகரன் எனப் பெயர் பெற்ற ராஜராஜசோழன் திடுக்கிட்டு எழுந்தார். உடனே தலைமை சிற்பியை அழைத்து, தான் கண்ட கனவைச் சொல்லி விசாரித்தார். சிற்பியும், கிழவி நீர்மோர் தந்ததையும் அவள் வேண்டுகோளையும் சொல்லி நடந்ததை விவரித்தார். ராஜராஜசோழனின் ஆணவம் நீங்கியது. ‘சிவபெருமானின் பாதங்களைத் தன் தலையில் சூடியிருப்பவன்’ என்று பொருள் படும்படியான சிவபாத சேகரன் எனும் பெயர் பெற்ற ராஜராஜசோழனுக்கே அப்படி என்றால், கோயிலுக்கு ஏதோ ஒரு ‘ட்யூப் லைட்டை’ வாங்கிக் கொடுத்துவிட்டு, தண்டோரா போடுவது நியாயமா?

இதைவிடக் கடுமையான முறையில் திருமூலர் கண்டிக்கிறார்; கடுமையாக எச்சரிக்கவும் செய்கிறார். ஒரு திருக்கோயிலில் உள்ள இறை வடிவத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு போய், வேறொரு திருக்கோயிலில் நிறுவக்கூடாது. அதை மீறிச் செய்தால், அந்தச் செயல் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, நாட்டை ஆளும் அரசனது ஆட்சி கலையும். அந்தச் செயலைச் செய்தவன், இறப்பதற்கு முன்பாகவே (அதாவது, இப்பிறவியிலேயே) தொழுநோயால் பீடிக்கப்பட்டு, துன்புற்று இறப்பான் என்கிறார் திருமூலர்.

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத்தானே!

ஆகம சாஸ்திரங்கள் சொல்லும் இத்தகவலைச் சொன்ன திருமூலர், இதைத் தனக்குச் சொன்னது நந்தி பகவான் என்று கூறி இப்பாடலை முடிக்கிறார். ஆகம சாஸ்திரங்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். உலகியல் ரீதியாகப் பார்த்தாலும் இப்பாடலின் கருத்து நம்மை மிரட்டுவதாகவே உள்ளது. ‘பிள்ளையார் சிலையைத் திருடிக் கொண்டு வந்துதான் வைக்க வேண்டும். அதுதான் ஐதீகம்’’ என்று சொல்வது, ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கிறது.  இது அண்டப் புளுகு,  இப்படி எந்த ஐதீகமும் கிடையாது. ஆகம சாஸ்திரங்களிலும் இப்படி கிடையாது.

திருச்சிற்றம்பலம்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “ராஜராஜசோழனின் ஆணவம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s